வவுனியா நகருக்கு மேற்கே மன்னார் பிரதான வீதியில் எட்டு கிலோ மீற்றர் தூரம்
சென்று பின் வடக்கே காட்டுப் பாதையூடாக மூன்று கிலோ மீற்றர் தூரம் சென்றால் ஒரு
சிறிய கிராமத்தைக் காணலாம்.
இருபது குடும்பங்கள் வரை
மட்டுமே உள்ள குக் கிராமமாக அது இருந்தது. பம்பைமடு என்பது அவ்வூரின் பெயர்.
அங்குதான் நான் பிறந்தேன்.
அடிப்படை வசதிகளை இயற்கையாக
மட்டுமே கொண்டிருந்த அந்தக் கிராமத்திற்கு பம்பைமடு என்று ஏன் பெயர் வந்தது என்று
கேட்டால் சொல்லி விளக்கக்கூடிய ஒருவர் எனது தந்தையார் மட்டுமே. அவரது பெயர்
நாகலிங்கம்.
அவர் படித்தது 5ம் ஆண்டு வரை தான். ஆனால் வில்லி பாரதப் பாடல்களில் அவருக்கு
பல பாடல்கள் மனப்பாடம். இராமாயணத்திலும் பல பாடல்கள் மனப்பாடம். நளவெண்பா, நைடதம்,
அரிச்சந்திரபுராணம் என்பவற்றோடு பல தனிப்பாடல்களும் அவருக்கு மனப்பாடம். நான்காம்
ஆண்டிற்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.
எமது ஊரிலும் , எமது
அயற்கிராமமாக இருக்கும் சாஸ்திரிகூழாங்குளத்திலும் பிள்ளையார் புராணத்திற்குப்
பயன் சொல்லுவது (புராண படனம்) அவர்தான்.கவிதைகளும் சில எழுதியிருக்கிறார்.
மிகவும் நயமாக
பாடல்களைப் பாடி, பாடல்களில் உள்ள சிறப்புக்களை எடுத்து விளக்குவார். மகாபாரதக்
கதையை அவர் எங்களுக்குச் சொல்லும்போது, தான் நேரே பார்த்துக்கொண்டு நின்றது போல
மிகவும் உணர்வு பூர்வமாக சுவையாகச் சொல்லுவார்.
வெள்ளை வேட்டியைத் தவிர
வேறெந்த உடுப்பையும் வீட்டிலுங்கூட உடுக்க மாட்டார். தலைக்கு மேலால் கழற்றும்
வெள்ளைச் சேட்டு (நைசனல்போல) வெள்ளைச் சால்வை அணிவது வழக்கம். நல்ல சிவந்த நிறம்.
யாழ்ப்பாணத்துக்குச்
சென்றால் அவரை தமிழ்ப் பண்டிதர் என்றுதான் அழைப்பார்கள். அவரது தோற்றம், உடுப்பு,
அறிவு, பண்பாடு அதன் வெளிப்பாடு யாவும் அவரை ஒரு பெரிய தமிழ்ப் பண்டிதராகத்தான் பார்ப்பவர்களுக்குக்
காட்டும்.
காலையிலே நித்திரையால்
எழும்புவது தொடக்கம், மாலை நித்திரைக்குச் செல்வது வரை ஏதாவது பழந்தமிழ் இலக்கியப்
பாடலை முணுமுணுத்துக் ராகம் பாடிக்கொண்டுதான் இருப்பார்.
எனது மூத்த சகோதரர்
நடராஜா அவரிடம் கேட்டு சில பாடல்களை ஒரு கொப்பியில் எழுதிப் பாடமாக்கத்
தொடங்கினார். எனக்கும் அந்தப் பழக்கம் தொடங்கியது.
எங்கள் வீட்டில் நாங்கள்
எட்டுப்பேர் பிள்ளைகள். ஆறு பேர் ஆண்கள். இரண்டு பேர் பெண்கள். வீட்டில்
ஆண்களுக்குள்ளே நான் தான் கடைக்குட்டி. எனக்குக் கீழே ஒரு தங்கை. நான் 04.12.1953 இல் பிறந்தேன்.
ஊரிலுள்ள யாவருக்கும் சாதகம் குறித்துக் கொடுப்பது(இலவசமாக) அவர் தான்.
ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் வீட்டு நிலையம், கிணற்று நிலையம் என்பவற்றை எடுத்துக்
கொடுப்பதும் அவர்தான். அவரது ஆற்றல்களை நினைத்தால் இப்போதும் எனக்கு ஆச்சரியமாக
இருக்கிறது.
பிள்ளைகளுக்குப் பெயர்
வைக்கும்போது இன்று எண் சோதிடப்படியும், நாம எழுத்து நட்சத்திரப் பிரகாரம்
பஞ்சாங்கப்படி பார்த்தும் வைப்பதுதான் வழக்கம்.
ஆனால் எனது தந்தையார் எமது
கிரக நிலைகளை ஆராய்ந்து அதன் தன்மைக்கு ஏற்ப வைத்திருந்தார்.அதன்படி அவர் எனக்கு
வைத்த பெயர் தர்மராஜா. என் தாயாரின் பெயர் நல்லம்மா.
எனக்கு தர்மராஜா என்று
பெயர் வைத்ததற்கு அவர் கூறிய காரணம் வியப்பானது. நான் அதுபற்றிக் கேட்டபோது அவர்
சொன்னார். “உன்ர கிரக நிலைப்படி உனக்கு ஒன்பதில வியாழன் நிக்குது, அது
புண்ணியவான்களுக்குத்தான் அமையும். நீ ஒரு தர்மவானாக இருப்பாய் ” என்றார்.
அது எவ்வளவு உண்மையோ மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.
இப்படி சோதிட, இலக்கிய,
சமய அறிவு நிரம்பக் கொண்டிருந்தவர் அவர். இலக்கியப் பாடல்கள் மட்டுமன்றி சோதிட,
வைத்தியப் பாடல்களும் பல அவருக்கு மனப்பாடம். சாதகாலங்காரப் பாடல்களை சாதகம்
பார்த்துப் பலன் சொல்லும்போது சொல்லிக் காட்டுவார்.
நான் பம்பைமடு அரசினர்
தமிழ்க் கலவன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி கற்ற பின் ஆறாம் ஆண்டில்
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு கல்வி கற்கச் சென்றேன். இப்போது அது தமிழ்
மத்திய மகாவித்தியாலயம். பின் இங்கு தான்
கணித ஆசிரியராகக் கடமை புரிந்தேன்.
சகோதரர்கள் யாவரும் பல
இடங்களிலும் படித்துக்கொண்டிருந்தனர். விடுமுறையில் ஆறு சகோதரர்களும் ஒன்றாக
வீட்டில் நின்றால் வீடு திருவிழாக் கோலம் கொள்ளும். யுத்த களமாகவும் இருக்கும்.

அற்புதமான பதிவு, பழயனினைவுகளை அழகாக தொகுத்துள்ளீர்கள்..........என்ன ஒரு பாக்கியம் சின்ன வயதில் இருந்தே படித்த பாடசாலைக்கு ஆசிரியராய் வருவது....
ReplyDelete