Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-வாசிப்பு-சுவாசிப்பு


க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை மார்கழியில் முடிந்தால், அதன் பெறுபேறுகள் வந்து சேர குறைந்தது ஏழு, எட்டு மாதங்களாவது பிடிக்கும்.
வவுனியா நகரில் தங்கியிருந்து படித்த நான் பரீட்சை முடிந்து பம்பைமடுவில் வீட்டில் இருந்த நேரத்தில், வீட்டில் இருந்த என் தந்தையாரின் இராமாயணப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன்.
கம்பராமாயணத்து சுந்தர காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் வீட்டில் இருந்தன. வை. மு. கிருஷ்ணமாச்சாரியினது உரையுடன் அமைந்த புத்தகங்கள் அவை. கிடைக்க முடியாத சொத்து. கிடைத்தது. படித்தேன்.
வீட்டுக்கு வந்து செல்லும் படித்தவர்கள் என்னை இத்தகைய புத்தகங்களை வாசிக்க வேண்டாமென்று ஏசினர்.
அவர்களின் விருப்பம் நான் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதாக இருந்திருக்கலாம். (இப்போது என் மகன் பொறியியலாளராக உள்ளார்.) பலரும் ஏச, ஏச நான் கேட்காமல் அப்புத்தகங்களில் ஈடுபட்டேன்.அதே சமகாலத்தில் எனது மூத்த சகோதரர் நா. தியாகராஜா பீ. ஏ. பட்டம் பெற்று விட்டு வேலை கிடைக்காமல் காத்திருந்தார். வவுனியா நூலகத்தில் இருந்து சரித்திர நாவல்களைக் கொண்டு வந்து வாசிப்பார்.பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு முதலான கல்கியின் நாவல்களும், வெற்றித் திருநகர், வேங்கையின் மைந்தன், கயல்விழி முதலான அகிலனின் நாவல்களும், கடல் புறா, ஜலதீபம், ராஜமுத்திரை முதலான சாண்டில்யனின் நாவல்களும், கோ. வி. மணிசேகரன், கௌசிகன் முதலான பலரின் சரித்திர நாவல்களும் எனக்கும் பெருவிருந்தாகின.இதே சமகாலத்தில் எனது இன்னொரு சகோதரர் நா. வில்வராஜா சமூக நாவல்களைக் கொண்டு வந்து வாசிப்பார். அவர் கொண்டு வந்த பொன்விலங்கு,குண்டு மல்லிகை, போராட்டங்கள், பெண்மனம், அலை ஓசை, கரித்துண்டு, பெற்ற மனம் என பார்த்த சாரதி, ரா. சு. நல்ல பெருமாள், லக்சுமி, வரதராஜன், கல்கி, அகிலன், மகரிஷி முதலானோரின் பல சமூக நாவல்கள் என் இலக்கியப் பசிக்குப் பெருந்தீனிகளாயின
.
பின்னால் எனது இன்னொரு சகோதரர் நா. நடராஜா வீரகேசரி நாவல்கள் வாசிப்பதில் பெரும் விருப்பம் கொண்டவர். எழுபதுகளில் வெளிவரத் தொடங்கிய வீரகேசரிப் பிரசுர நாவல்கள் யாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும். அவருக்கு முன்னால் அவற்றை நான் வாசித்து முடித்து விடுவேன். இத்தகைய வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. இவைகளைப் படித்துக்கொண்டு இலக்கிய இன்பத்தில் மூழ்கித் திளைத்திருந்த சமயத்தில் க.பொ. த.சாதாரண தரப் பெறுபேறு வந்தது.பாடசாலையில் முதல் மாணவனாகச் சித்தி எய்தினேன். க. பொ. த. உயர் தரம் படிக்க வவுனியாவில் பாடசாலை இல்லை. கலை வகுப்புக்கள் தொடங்கி இருந்தன. கணித விஞ்ஞானப் பாட வகுப்புக்கள் அப்போது இல்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, முதலான பெரிய பாடசாலைகளில் நேர்மையாக முயன்று கிடைக்காததால், சிபார்சு மூலம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம் கிடைத்தது. எனது சகோதரர் தியாகராஜா உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் சென்றது அங்கிருந்து தான். அதுவும் எனக்கு அனுமதி கிடைக்க ஒரு காரணம் தான்.1971ல் அங்கு சென்று சேர்ந்தேன்.
அங்கே படித்த காலத்தில் அங்குள்ள நூலகத்தில் இருந்த பழந்தமிழ் இலக்கியப் புத்தகங்களில் பலவற்றைத் தூசு தட்டிச் சுவைத்தேன். பாடசாலையில் கவியரங்குகளில் கவி பாடினேன். மாணவ மன்றக் கூட்டங்களில் பேசினேன். விடுதி மாணவ மன்றத்திற்கும் தலைவராக இருந்தேன். எழுத்திலும் ஆர்வம் பிறந்தது. வவுனியாவில் அப்போது கடமையாற்றிய திரு.எஸ். தில்லைநடராஜா (உடுவை எஸ். தில்லை நடராஜா) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவொன்றில், கவியரங்கில் வன்னியூர்க் கவிராயரோடு கலந்து கொண்டேன். க. பொ. த. உயர்தரம் முடித்த பின் பல்கலைக்கழகத் தெரிவை எதிர்பார்த்துக் காத்திருந்த காலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். எல்லாத் துறை நூல்களையும் நிறையவே வாசித்தேன்.                                         

No comments:

Post a Comment