Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-கவிதைகள்


கவிதைதான் எனது முதல் ஆக்க இலக்கிய வடிவம். அந்த வகையில் பல கவியரங்குகளில் பங்குபற்றி, பல கவியரங்குகளுக்குத் தலைமை வகித்து மகிழ்ந்திருக்கிறேன்.
 “செல்” “வா” என்று ஆணையிடாய்”, “சேரர் வழியில் வீரர் காவியம்”, “சமவெளி  மலைகள்”, (அகளங்கன், சு.முரளிதரன்), “தென்றலும் தெம்மாங்கும்”, “அகளங்கன் கவிதைகள்”, “இசைப்பாமாலை” “சுட்டிக் குருவிகள்”(சிறுவர் பாடல்கள்) , “சின்னச் சிட்டுக்கள்”(சிறுவர் பாடல்கள்)  என்பன எனது கவிதை நூல்கள்.
இவற்றில் “அகளங்கன் கவிதைகள்” நூல் வடக்குக் கிழக்கு மாகாண இலக்கிய நூல் பரிசைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.
         இலங்கை வானொலி அகில இலங்கை ரீதியாக நடாத்திய நாவற்குழியூர் நடராஜன் நினைவுக் கவிதைப் போட்டியிலும், அவுஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியாத் தமிழ்ச் சங்கம் உலகளாவிய ரீதியில் நடாத்திய கவிதைப் போட்டிகளில் இரு தடவைகளும் இரண்டாம் பரிசுகள் கிடைத்தன.
மாத்தறை மக்கள் சமாதான அமைப்பு நடாத்திய கவிதைப் போட்டியிலும் இரண்டாம் பரிசு கிடைத்தது.
வவுனியா நகரசபைக் கீதம், வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கக் கீதம், அதன் பாலர் பாடசாலைக் கீதம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரிக் கீதம், வவுனியா இந்து மா மன்றக் கீதம்,மற்றும் பல மன்றங்கள், பாடசாலைகள் போன்றவற்றின் கீதங்களையும் எழுதியுள்ளேன்.
பல நாட்டிய நாடகங்களை எழுதியுள்ளேன். இலக்கியம், சாமாதானம், சமயம் சம்பந்தமான அந்த நாட்டிய நாடகங்கள் பல தடவைகள் மேடையேற்றப் பட்டதுடன் பரிசுகளையும் பெற்றுள்ளன.
கும்மி, கரகாட்டம், கோலாட்டம், போன்ற கலை வடிவங்களுக்காகவும் பாடல்கள் எழுதியுள்ளேன். பொங்கல், புதுவருடம், தொழில், கிராமியம் எனப் பல பாடல்கள் எழுதியுள்ளேன்.
“வன்னி ஓடை”, “வன்னி அருவி”, “வன்னி ஊற்று”, “சிறகுகள்” எனும் பெயர் கொண்ட பாடல் தொகுப்பு, எனப் பல ஒலிப் பேழைகளிலும் எனது இசைப் பாடல்கள் வெளிவந்துள்ளன.
பண்டார வன்னியனைப் பற்றி எழுதிய எனது பாடல்களும், வன்னிக் கிராமியம் பற்றி எழுதிய பல பாடல்களும் பலரதும் நெஞ்சங்களிலும் நிறைந்துள்ளன.

No comments:

Post a Comment