Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்- கல்வி – கலை – இலக்கியம்.


க. பொ. த. சாதாரண வகுப்புக்கு நான் வந்த போது, ஒன்பதாம் வகுப்பிலேயே என்னைக் கெட்டிக்கார மாணவனாகக் கருதி கணிதத் துறையில் பிரித்து விட்டார்கள்.
தூய, பிரயோக கணிதங்கள், பௌதிகவியல், இரசாயனவியல், மெக்கானிக்கல் றோயிங் முதலான பாடங்கள் எனக்குத் திணிக்கப்பட்டன. நான் பொறியியலாளராக வரவேண்டுமென்பது பாடசாலை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.
தமிழ் ஒரு பாடம். தமிழிலக்கியம் கற்க முடியாது. தமிழ், இந்து சமயம்,கணித பாடங்களில் நான் அதி கூடிய புள்ளிகள் வாங்கும் மாணவன் என்பது உண்மைதான். இருப்பினும் என் ஆர்வம் இலக்கியத்திலேயே இருந்தது.
6, 7, 8,  ம் வகுப்புகளில் சங்கீதம் படித்தேன். பின் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் அப்போது எமக்கு பௌதிகவியல் பாடம் கற்பித்த திரு. நா. சண்முகானந்தா ஆசிரியர் எனக்கும் நடனம் கற்பித்தார். மேடைகளில் காவடி நடனக் குழுவில் ஒருவனாக ஆடியிருக்கிறேன். இது பாடத்திட்டத்திற்குப் புறம்பாகவே நடந்தது.
9 ம் வகுப்பில் விவேகானந்த சபை நடாத்திய சைவ சமயப் பரீட்சையில் முதலாம்   பிரிவில் சித்தி எய்தினேன்.   பத்திரிகைகளில் எனது பெயரும் வந்தது. மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டேன். பத்திரிகையில் முதன் முதல் என் பெயர் வெளிவந்தது அப்போதுதான்.
முதலாம் பிரிவில் சித்தி எய்திய எனக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்தகம் என்ன தெரியுமா! கலிங்கத்துப்பரணி. பதினைந்து வயது முடிந்த பருவத்தில் பரிசாகக் கிடைத்த கலிங்கத்துப்பரணியில் கடை திறப்புப் பாடல்களைப் படிக்கப் படிக்க அதிலிருந்த காமச் சுவை கலந்த இலக்கியச்சுவை என்னைக் கவிஞனாக்க முயன்றது. ஓரிரு கவிதைகளை எழுத முயன்றேன். 
பாடசாலையில் மாணவ மன்றக் கூட்டங்களில் பேச முயன்றேன். முதற் தடவையாக மனனமாக்கி ஒரு விஞ்ஞானியைப் பற்றிப் பேசினேன். பாடமாக்கிப் பேச எனக்குப் பிடிக்கவில்லை.
அந்த ஆண்டு பதினாறு வயது நடந்து கொண்டிருந்த பொழுது, வருடாந்த நவராத்திரி விழாவில் பாடசாலை மண்டபத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் நாற்பது நிமிடங்கள், கையில் எந்தக் குறிப்புமின்றி சமயச் சொற்பொழிவை, இலக்கியம் கலந்து காளமேகப்புலவரின் சிலேடைப் பாடல்களோடு சேர்த்து சுவாரஸ்யமாக ஆற்றி முடித்தேன்.
எனக்கு மட்டுமல்ல யாவருக்குமே ஆச்சரியம்தான். அதே விழாவில் வில்லுப்பாட்டொன்றை எழுதித் தயாரித்து நானும் நண்பர்களும் மேடையேற்றினோம்.
பேச்சு, கலை இலக்கியப்பணி அப்போது தொடங்கியது. பதினேழு வயதில் கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். அவை கவிதைகளா என்பது தெரியாது.

No comments:

Post a Comment