எமது வெள்ளித் தமிழ்ச் சங்கத்தின் முதலாவது கூட்ட அறிக்கை:-
சுக்கில வருடம், ஆங்கிலப் படி ஜுன் மாதம் 2ந் திகதி 1989 ம் ஆண்டு எமது வீட்டு, வெள்ளித் தமிழ்ச் சங்கக்
கூட்டம் மாலை 6.30 மணிக்கு திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. (ஹோல்புறுக்
ஆசிரிய விடுதி)
செல்வி.த.அநிந்திதை அவர்களின் தேவார பாராயணத்துடன்
கூட்டம் இனிதே தொடங்கியது.
தலைவர் தமதுரையின் போது தமது 13 வருடங்களுக்கு முந்திய திட்டமொன்று இன்று
நிறைவேறுவதாகக் கூறி மகிழ்ந்தார்.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் இக் கூட்டம் நடை
பெற வேண்டும், கூட்டங்கள் கட்டுப் பாட்டுடன் திறமைகளை வளர்க்கவும், குடும்ப
ஒற்றுமையைக் கட்டிக் காக்கவும் பயன்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
செயலாளர் தனதுரையில் தனது மகிழ்ச்சியைத்
தெரிவித்ததோடு இக் கூட்டம் தொடர்ந்து நல்ல முறையில் இயங்கத் தனது முழு
ஒத்துழைப்பையும் நல்குவதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
செல்வன்.த.அநபாயன் அவர்கள் “நரியும் பூனையும்
வாழைப் பழம் உண்ட கதை”யைக் கூறினார்.
செல்வி.த.அநிந்திதை “அன்னக் கதை” கூறினார்.
அதைத் தொடர்ந்து செல்வன் சே.காண்டீபன் அவர்கள்
”தமிழகமும் நிலமும்” என்ற தலைப்பில் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தமிழகம்
சிறப்புற்றிருந்தது எனவும், நால்வகை நிலங்கள் பற்றியும் பின்பு ஐவகை நிலமானது
பற்றியும், தமிழகத்தில் உள்ள மலைகளின் பெயர்கள் ஊர்களுக்கு வந்தது பற்றியும்
தெளிவாகக் கூறி, ஈழத்திலும் சில சான்றுகளைக் காட்டினார்.
அதைத் தொடர்ந்து செல்வன்.த.அநபாயன் “சின்னக்
கோழிக் குஞ்சுகள்”, “தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு”ஆகிய பாடல்களைப் பாடினார்.செல்வி.த.அநிந்திதை
“காக்கையாரே காக்கையாரே” என்ற பாடலைப் பாடினார்.
சிறு இடைவேளை விடப்பட்டது. இடைவேளையின் போது
கிழங்கு ரொட்டி பரிமாறப் பட்டது.
இடைவேளையைத் தொடர்ந்து செல்வன்.த.அநபாயன்
“கொழுக்கட்டைக் கதை” கூறினார். செல்வி.த.அநிந்திதை “பொன்னார் மேனியனே”,”தோடுடைய
செவியன்” ஆகிய தேவாரங்களைப் பாடினார்.
அதைத் தொடர்ந்து கணிதம் சம்பந்தமான விளையாட்டு
கூட்டத்தின் சிறப்பம்சமாக இருந்தது. அதைத் தொடர்ந்து சபையோர் குறிப்புரையில்,
செயலாளர் தானும் ஒரு உறுப்பினர் என்ற முறையில் விறகுத் தட்டுப்பாடு பற்றி
விளக்கினார்.
சாப்பாட்டில் உள்ள குறை நிறை பற்றி செல்வன்
காண்டீபன் கூறினார். செல்வன் அநபாயனும், செல்வி அநிந்திதையும் தமக்கு எந்தப்
பிரச்சனையும், எந்தக் கஷ்டமும் இல்லை எனக் கூறினர்.
மேலும் செயலாளர் அநபாயன், அநிந்திதை ஆகியோரின்
குழப்படி பற்றி எடுத்துக் கூறினார். ஆனால் அவை கூட்டக் குறிப்பில் இடம்
பெறக்கூடாது எனத் தலைவர் கூறியதன் பெயரில் அவை தவிர்க்கப் பட்டுள்ளன.
தலைவர் தமது முடிவுரையில், விறகுத் தட்டுப்பாடு,
சாப்பாட்டுப் பிரச்சனை என்பன தீரத்து வைக்கப் படும் என்று உறுதி கூறினார்.
அதைத் தொடர்ந்து செயலாளர் நன்றியுரை கூறினார்.
செல்வன்.த.அநபாயனின் தேவாரத்துடன் கூட்டம் இனிதே நிறைவெய்தியது.
நா.தர்மராஜா 12.06.1989 பூ.தர்மராஜா
தலைவர் செயலாளர்
இரண்டாவது கூட்ட அறிக்கை:
மேற்படி எமது வீட்டு வெள்ளித் தமிழ்ச் சங்கக்
கூட்டம் 12.06.1989.திங்கட்கிழமை மாலை 6.35 மணிக்கு ஹோல் புறுக் ஆசிரிய விடுதியில், திரு.நா.தர்மராஜா
அவர்களது தலைமையில் ஆரம்பமாகியது.
செல்வி.த.அநிந்திதை அவர்களின் தேவார இசையுடன்
இனிதே தொடங்கியது.
தலைவர் தமதுரையின் போது,மேற்படி கூட்டம்
ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டியது சில தவிர்க்க முடியாத
காரணங்களினால் உரிய திகதியில் நடைபெற முடியாமற் போனது என்று மனவருத்தம்
தெரிவித்து, இன்று திங்கட்கிழமை நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், குடும்பக் கீதம்,சிவபுராணம் என்பன கூட்ட
நிகழ்ச்சியில் இடம் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்து செயலாளர் கூட்ட அறிக்கையை வாசித்தார். அதைத்
தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
செல்வன்.த.அநபாயன் அவர்கள் “கூற்றாயினவாறு”
“தலையே நீ வணங்காய்” “பொன்னார் மேனியனே” ஆகிய தேவாரங்களையும், “மூவிரு முகங்கள்
போற்றி”என்ற புராணத்தையும் அழகாகப் பாடினார்.
செல்வி.த.அநிந்திதை அவர்கள் “மழையே மழையே பெய்யாதே”
என்ற பாட்டை அபிநயத்துடன் பாடினார். அத்துடன் “அம்மா இங்கே வா வா”என்ற பாடலையும்
பாடி மகிழ்வித்தார்.
அடுத்து செல்வன் சே.காண்டீபன் அவர்கள் சைவத்தின்
தொன்மை,சிந்து வெளி நாகரீகம்,வேத காலம் என்பவைகளைத் தொடர்பு படுத்தி பேச்சு
ஒன்றைப் பேசினார்.
பத்து நிமிட இடைவேளை விடப்பட்டு, கிழங்கு ரொட்டி
பரிமாறப் பட்டது.
அடுத்து அநிந்திதை” நிலா நிலா வா
வா”,”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” ஆகிய பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.
அடுத்து அநபாயன் “நல்ல நல்ல வீடு” பாடலைப்
பாடியதுடன் யானை குளித்த நகைச்சுவைக் கதையையும் கூறி மகிழ வைத்தார்.
அடுத்து காண்டீபன் “அகர முதல “,இன்னா
செய்தாரை”ஆகிய திருக்குறள்களைக் கூறினார்.
அடுத்து தலைவர் அவர்கள் திருக்குறள் பற்றி
மிகவும் சுருக்கமாகவும்,தெளிவாகவும் உரை ஆற்றினார்.
செல்வி.த.அநிந்திதை அவர்கள் நித்திரை செய்து விட்டதால் விளையாட்டு நிகழ்வு இடம்
பெறவில்லை. செல்வன்.த.அநபாயனின் தேவாரத்துடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 23.06.1989 செயலாளர்
மூன்றாவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம் ஹோல்
புறுக் ஆசிரிய விடுதியில் 23.06.1989. வெள்ளிக்கிழமை மாலை 6.50.மணியளவில் திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில்
ஆரம்பமாகியது.
செல்வி.த.அநிந்திதையின் தேவார இசையுடன் இனிதே
தொடங்கியது.தொடர்ந்து செல்வன்.த.அநபாயன் சிவபுராணத்தை பக்தியுடன் ஓதினார்.
அடுத்து தலைவர் தமது உரையில், கூட்டம் மிகவும்
காலந் தாழ்த்தித் தொடங்கியதால் விரைவில் நிகழ்வு நடைபெற வேண்டும் என்றார்.
செயலாளர் கூட்ட அறிக்கையை
வாசித்தார்.ஏற்றுக்கொள்ளப் பட்டது.
தொடர்ந்து அநிந்திதை “அம்மா அப்பா வண்டியிலே”,
“ஆனா சொல்லித் தந்தார்”ஆகிய பாடல்களை இனிமையாகப் பாடினார். அநபாயன் “ஔவைக்
கிழவி”,”மாமி தந்த பந்து”ஆகிய பாடல்களை பாடி மகிழ்வித்தார்.
தொடர்ந்து அநிந்திதை “கிழங்குக் கதையை”மிகவும்
சுவாரஸ்யமாகக் கூறினார்.அநபாயன் “இரணியன்”எனும் கதையைக் கூறினார்.
அடுத்து காண்டீபன் செல்வம் என்ற தலைப்பில்
அருமையான பேச்சைப் பேசினார்.
பின் சிறிது நேரம் இடைவேளை விடப் பட்டு வடை
பரிமாறப் பட்டது.
அடுத்து அநபாயன் “நத்தார் படை”, “வேதம் ஓதி”ஆகிய
தேவாரங்களை இசைத்தார். அநிந்திதை “மாசில் வீணையும்”என்ற தேவாரத்தை இசைத்தார்.
அடுத்து காண்டீபன் “தீயவை தீய
பயத்தலால்”,”எந்நன்றி கொன்றார்க்கும்” ஆகிய குறள்களைக் கூறினார்.
அடுத்து தலைவர் குறள்களுக்கு பொருள் விளக்கம்
கூறினார்.செயலாளர் குழந்தைகள் அன்புடனும், பண்புடனும்,பொறுமையுடனும் இருக்க
வேண்டுமென கிரிசாம்பாள் கதையைக் கூறி விளக்கினார்.
தொடர்ந்து சபையோர் குறிப்புரை இடம் பெற்றது.
அநபாயன், தன்னை தங்கை அநிந்தி “வாடா” “போடா”
என்று கதைக்கிறார் என்று தனது பிரச்சனையை முன் வைத்தார். உடனடியாக திடீர் என்று
அநிந்திதையும் எனக்கும் ஒரு பிரச்சனை உள்ளது எனத் தொடங்கி, என்னையும் அண்ணா “வாடி
போடி”என்று கதைப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.
அதற்கு, தலைவர் அவர்கள் இனிமேல் இருவருமே
அப்படிக் கதைக்கக் கூடாது என பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.
செயலாளர் நன்றியுரை கூறினார். அநபாயனின் தேவார
இசையுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 29.09.1989. செயலாளர்
நான்காவது கூட்ட அறிக்கை:
29.09.1989.வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணியளவில் ஹோல்புறுக் ஆசிரிய விடுதியில் நா.தர்மராஜா அவர்கள் தலைமையில் நடை பெற்றது.
அநிந்திதையின் தேவார இசையுடன் கூட்டம் இனிதே ஆரம்பமாகியது.
தலைவர் தமதுரையின் போது நீண்ட கால இடைவேளைக்குப்
பின் நாட்டு நிலைமை காரணமாக மூன்று மாதங்களுக்குப் பின் இன்று இக் கூட்டம்
தொடர்வது மிக்க மகிழ்ச்சியான விடயம் எனவும், தொடர்ந்தும் பிரச்சனைகள் இன்றி இனிதே
நடைபெற வாய்ப்பு ஏற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்து செயலாளர் கூட்ட அறிக்கையை வாசித்தார்.
ஏற்றுக்கொள்ளப் பட்டது.
அநபாயன் சிவபுராணத்தில் ஒரு பகுதியைப் பாடினார்.
அநிந்திதை “வானைக்காவில் வெண்மதி”தேவாரத்தை இசைத்தார். அநபாயன்
“பூவினுக்கருங்கலம்’, “வேயுறு தோழி பங்கன்”ஆகிய தேவாரங்களைப் பாடி மகிழ்வித்தார்.
அடுத்து காண்டீபன் “சம்பந்தர்” என்ற தலைப்பில்
நீண்டதொரு பேச்சைப் பேசினார்.தொடர்ந்து அநபாயன் சகலகாலவல்லி மாலையின் முதற் பாடலான
“வெண்டாமரைக் கன்றி நின் பதம்” எனும் பாடலைப் பாடினார்.
பத்து நிமிட இடைவேளை விடப் பட்டு கிழங்கு ரொட்டி
பரிமாறப் பட்டது.
அநிந்திதை “பாலுந் தெளிதேனும்” எனும் ஔவையார்
பாடலைப் பாடினார். தொடர்ந்து அநபாயனும்
அநிந்திதையும் இணைந்து “கீரை விதைக்கணும்”எனும் அபிநயப் பாடலைப் பாடி
மகிழ்வித்தனர்.அநபாயன் நாவல் பழக் கதையையும், அநிந்திதை ஆமைக் கதையையும்
கூறினார்கள்.
அடுத்து காண்டீபன் “பிறவிப்
பெருங்கடல்”,”செயற்கரிய செய்வர்”,”தன்நெஞ் சறிவது”ஆகிய குறள்களைக் கூறினார்.
தொடர்ந்து சபையோர் குறிப்பு இடம்
பெற்றது.அநபாயனும், காண்டீபனும் தம்மை அநிந்தி ஏசுவதாகக் குற்றம் சாட்டினர்.
அதற்கு அநிந்திக்குப் புத்திமதி கூறப் பட்டது. அநபாயன் சல்லி முட்டியை உடைத்தது
பிழை என்றும் கண்டிக்கப் பட்டது. பாடசாலையில் குழப்படி செய்தல் கூடாதெனவும் கூறி,
இனிமேல் யாராவது இவ்வித தவறு செய்தால் கடும் தண்டனை கிடைக்கும் எனவும் தலைவர்
குறிப்பிட்டார்.
செயலாளர் நன்றியுரை கூறினார்.அநபாயனின்
தேவாரத்துடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா பூ.தர்மராஜா
தலைவர்
20.10.1989. செயலாளர்
ஐந்தாவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம் ஹோல்
புறுக் ஆசிரிய விடுதியில் திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில் 20.10.1989.வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று
மணிக்கு,செல்வன்.த.அநபாயன் அவர்களின் தேவார இசையுடன் இனிதே ஆரம்பமாகியது.
தலைவர் அவர்கள் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து,
கடந்த இரண்டு கிழமைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கூட்டம் நடைபெறவில்லை.
சரஸ்வதி பூஜை வீட்டில் விசேடமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நான் அவசரமாக செல்ல
வேண்டி உள்ளது என்று கூறினார்.
செயலாளரின் கூட்ட அறிக்கை வாசிப்பைத் தொடர்ந்து,
செல்வி.த.அநிந்திதை அவர்கள் எமது குடும்ப கீதத்தை இசையோடு பாடினார்.
அடுத்து அநபாயன் “நத்தார் படை”, “மாதர்ப்
பிறைக்கண்ணி” ஆகிய தேவாரங்களைப் பாடினார். அநிந்திதை “பூவினுக் கருங்கலம்”,
“காதலாகிக் கசிந்து”ஆகிய தேவாரங்களைப் பாடினார்.
தொடர்ந்து அநபாயன் “எண்ணென்ப”, “கற்றாருள்”,
“இன்னா செய்தாரை”, “தீயவை தீய”, “பிறவிப் பெருங்கடல்” ஆகிய குறள்களைக் கூறினார்.
அடுத்து காண்டீபன் திருநாவுக்கரசர் பற்றி
நீண்டதொரு பேச்சைப் பேசினார்.
அநிந்திதை “அகர முதல”, “வெள்ளத் தனையது” ஆகிய
குறள்களையும், “வெண்டாமரைக்கன்றி”எனும் சகல கலா வல்லி மாலைப் பாடலையும் பாடினார்.
அவசரமாகக் கூட்டம் பகல் வேளையில் நடைபெற்றதால்
இடைவேளை விடவில்லை.சிற்றுண்டியும் பரிமாறவில்லை.
தொடர்ந்து காண்டீபன் சில குறள்களைக் கூறினார்.
அநபாயன் “வாக்குண்டாம்” “சொல்விற்பனமும்” ஆகிய பாடல்களைப் பாடியதுடன் “யானை”என்ற
தலைப்பில் சிறிய பேச்சையும் பேசினார்.அநிந்திதை “வீசி ஆடும் ஊஞ்சலாம்”எனும்
பாடலைப் பாடி மகிழ்வித்தார்.
அடுத்து நொடிகள் சில கூறப்பட்டன. தொடர்ந்து
உறுப்பினர்களால் கூறப் பட்ட குறள்களுக்கு தலைவர் விளக்கம் அளித்தார்.
நேரப் பிரச்சனையால் சபையோர் குறிப்பு
இடம்பெறவில்லை. செயலாளரின் நன்றியுரையினைத் தொடர்ந்து அநிந்திதையின் தேவாரத்துடன்
கூட்டம் இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 03.10.1989. செயலாளர்
ஆறாவது கூட்ட அறிக்கை:
03.10.1989 வெள்ளிக்கிழமை மாலை 6.15மணியளவில் ஹோல் புறுக் ஆசிரிய விடுதியில் தலைவர்
திருநா.தர்மராஜா அவர்களின் தலைமையில்,அநிந்திதையின் தேவார இசையுடன் எமது வெள்ளித்
தமிச் சங்கக் கூட்டம் ஆரம்பமாகியது.
தொடர்ந்து
இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டும், உறுப்பினர்கள் ஆர்வத்துடன் தமது திறமைகளை வெளிப்படுத்த
வேண்டும்,அனைவரும் தமது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என தலைவர் தன்னுரையில்
குறிப்பிட்டார்.
செயலாளரின் கூட்ட அறிக்கை வாசிப்பைத் தொடர்ந்து அநிந்திதை அவர்கள் எமது
குடும்ப கீதத்தை பாடி மகிழ்வித்தார்.
அநபாயன் “இல்லக விளக்கது”,”ஆலந் தானுகந்”,”வேயுறு தோழி பங்கன்”ஆகிய
தேவாரங்களைப் பாடி சபையோரை உற்சாகப் படுத்தினார்.
அநிந்திதை “பிடியதனுருவுமை”,”ஆலந்தானுகந் தமுது”ஆகிய தேவாரங்களை இசையோடு
பாடினார்.காண்டீபன் சுந்தர மூர்த்தி சுவாமிகள் வரலாறு பற்றி சுருக்கமாகப்
பேசினார்.
தொடர்ந்து
அநிந்திதை “மாதர்ப் பிறைக் கண்ணி யானை””,நத்தார் படை”ஆகிய தேவாரங்களை ஜானகியின்
குரலில் பாடி மகிழ்வித்தார். அநபாயன் “ஔவைக் கிழவி நங்கிழவி”,என்ற
பாடலையும்,”பசு”எனும் தலைப்பில் சிறிய பேச்சையும் தந்தார்.
அடுத்து சிறிய இடைவேளை விடப்பட்டு பிஸ்கட் பரிமாறப்பட்டது.
தொடர்ந்து காண்டீபன் “எப்பொருள்
யார்யார்வாய்க்”, “எப்பொருள் எத்தன்மைத்”, “பிறர்க்கின்னா” ஆகிய குறள்களைக்
கூறினார்.தொடர்ந்து அநபாயன் “நன்றி மறப்பது”,”ஒழுக்கம் விழுப்பம்”ஆகிய குறள்களைக்
கூறினார்.
அடுத்து அநிந்திதை “வில்லண்டம் வரும் கவனம்”, “இது எவடம்” ஆகிய நகைச்சுவைக்
கதைகளைச் சொல்லி சிரிக்க வைத்தார். சிரித்தது போதாது இன்னும் சிரியுங்கள் என்பது
போல் ,”சுடலை மாடன்” “விசிலடித்தது” ஆகிய நகைச்சுவைக் கதைகளைச் சொல்லிச் சிரிக்க
வைத்தார்.
அடுத்து தலைவர் அவர்கள் தீபாவளிப் பண்டிகை பற்றிக் கூறினார். மேலும் சொல்லிய
குறள்களுக்கு விளக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து சபையோர் குறிப்பு இடம்பெற்றது. பழ மொழி கூறும் நிகழ்ச்சி இடம்பெற
வேண்டும் என அநபாயன் சொன்னார். திருக்கேதீஸ்வரப் பதிகத்தை மனனம் செய்ய வேண்டும்
எனவும், நிகழ்வை இரவில் வைப்பதால் உறுப்பினர் நித்திரை செய்கின்றனர் அதனால் பகலில்
நிகழ்வு இடம்பெற வேண்டும் எனவும் தலைவர் கேட்டுக் கொண்டார்.
அநிந்திதையின் தேவார இசையுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 10.11.1989. செயலாளர்
ஏழாவது கூட்ட அறிக்கை:
ஹோல்
புறுக் ஆசிரிய விடுதியில் திருநா.தர்மராஜா அவர்களின் தலைமையில், 10.11.1989.வெள்ளிக்கிழமை மாலை 6.15.மணியளவில்,எமது வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம்
அநிந்திதையின் தேவாரத்துடன் ஆரம்பமாகியது.
விசேடமாக அவர் பஞ்ச புராணத்தை ஒழுங்காக,அழகாகப் பாடி நிகழ்வை ஆரம்பித்து
வைத்தமை மிகவும் பாராட்டுக்குரியது.
அடுத்து தலைவர் அவர்கள் பஞ்ச புராணம் பாடியதைப் பாராட்டியதுடன், அனைத்து
உறுப்பினர்களும் தமது திறமைகளை வளர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
செயலாளர் கடந்த கூட்ட அறிக்கையை வாசித்தார்.சிறு திருத்தத்துடன் அறிக்கை
ஏற்றுக்கொள்ளப் பட்டது. தொடர்ந்து அநிந்திதை குடும்ப கீதத்தைப் பாடினார்.
அடுத்து அநபாயன் “விண்ணுற அடுக்கிய”எனும் தேவாரத்தையும் “பாலுக்குப்
பாலகன்”எனும் திருப் பல்லாண்டையும் பாடி மகிழ்வித்தார். அநிந்திதை “ஒளிவளர்
விளக்கே” எனும் திருவிசைப்பாவையும், “முத்திநெறி அறியாத”எனும் திருவாசகத்தையும்
இசைத்தார்.
தொடர்ந்து
அநபாயன் “நாய்”எனும் தலைப்பில் சிறு பேச்சைப் பேசி உற்சாகப் படுத்தினார்.அநிந்திதை
“முன்னை இட்ட தீ”எனும் பட்டினத்தார் பாடலையும், “குஞ்சியழகும்”எனும் நாலடியார்
பாடலையும் பாடி நிகழ்வைச் சிறப்பித்தார்.
அடுத்து காண்டீபன் மாணிக்கவாசகர் எனும் தலைப்பில் சிறப்பான பேச்சைப்
பேசினார்.அநபாயன் “வாரணம் பொருத மார்பும்” எனும் கம்ப இராமாயணப் பாடலையும்
“பண்ணும் பரதமும்”, “அளிக்கும் செழுந்தமிழ்”ஆகிய பாடல்களையும் தெளிவாகப் பாடினார்.
இடைவேளை விடப்பட்டு கிழங்கு ரொட்டியும் பரிமாறப் பட்டது.
தொடர்ந்து அநிந்திதை “ஆறின கஞ்சி பழங்கஞ்சி”,
“அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்", “இளங்கன்று பயமறியாது”ஆகிய
பழ மொழிகளைக் கூறினார்.காண்டீபன் “அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்”,
“ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு”, “கடுகு சிறிதானாலும் காரம் பெரிது”ஆகிய பழ
மொழிகளைக் கூறினார்.
அடுத்து அநபாயன் “பொய் சொல்லக் கூடாது
பாப்பா”பாடலைப் பாடினார்.காண்டீபன் “வசையொழிய”, “தோன்றிற்”, “மகன் தந்தைக்”ஆகிய
குறள்களைச் சொன்னார்.அநபாயன் “எறும்பூரக் கற்குழியும்”, “பணம் பந்தியிலே குணம்
குப்பையிலே”,ஆகிய பழ மொழிகளைச் சொன்னார்.
அடுத்து தலைவர் சிறப்புரை வழங்கினார். நிகழ்வுகள் சிறப்புடன்
அமைந்தன,என்றும் நெறிப்படுத்திய செயலாளருக்கும் நன்றியையும் பாராட்டையும்
தெரிவித்தார்.மேலும் நிகழ்வில் இடம் பெற்ற பாடல்களுக்கு விளக்கக்
குறிப்புக்களையும் வழங்கினார்.
சபையோர் குறிப்புரையில் உறுப்பினர்கள் சண்டை
போடாது அன்பாக இருக்கவேண்டும்.என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.செயலாளர் நன்றியுரை
கூறினார்.
அநபாயனும்
அநிந்திதையும் நித்திரையாகி விட்டார்கள்.காண்டீபனின் தேவார இசையுடன் நிகழ்வு இனிதே
நிறைவேறியது.
நா.தர்மராஜா ,
பூ.தர்மராஜா
தலைவர் 16.02.1990. செயலாளர்
எட்டாவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம்,
ஹோல்புறுக் ஆசிரிய விடுதியில், திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில் 16.02.1990.வெள்ளிக்கிழமை மாலை 6.45.மணியளவில் அநிந்திதையின் தேவார இசையுடன்
ஆரம்பமாகியது.
தலைவர் இந்நிகழ்வு நீண்ட இடைவெளியின் பின்
நடக்கிறது,செயலாளர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அநிந்திதை குடும்ப கீதத்தைப்
பாடினார். கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. அநபாயன் “தலையே நீ வணங்காய்”,
“கண்காள் காண்மின்களோ”, “கைகாள் கூபித் தொழீர்”
ஆகிய தேவாரங்களைப் பாடினார்.
அநிந்திதை “தேவாரம் பாடிய குழந்தை”எனும்
கதையைச் சொன்னார். அநபாயன் “பற்றுக பற்றற்றான்”, “பொருளல்லவரை”ஆகிய குறள்களைச்
சொன்னார்.
தொடர்ந்து காண்டீபன் “பனித்திளந் திங்கள்”,
“குனித்த புருவமும்”, ஆகிய தேவாரங்களைப் பாடினார்.அநிந்திதை “விருது குன்றமா”,
“கைகாள் கூப்பித் தொழீர்’ஆகிய தேவாரங்களை இசைத்தார்.
அடுத்து காண்டீபன் “கள் பெற்ற பெருவாழ்வு”எனும்
பொருளில் பேசினார்.
இடைவேளை விடப்பட்டு கிழங்கு ரொட்டி
பரிமாறப்பட்டது.
அநிந்திதை “கோலமா மஞ்ஞை”எனும் கந்தபுராணப்
பாடலையும், “ஏறுமயில் ஏறி”எனும் திருப்புகழையும் பாடினார்.அநபாயன் “விருது
குன்றமா”எனும் தேவாரத்தையும், “கோலமா மஞ்ஞை”எனும் கந்தபுராணப் பாடலையும்பாடினார்.
அடுத்து அநிந்திதை வெற்றிவேற்கையில்
“எழுத்தறிவித்தவன்,” “கல்விக்கழகு” ஆகியவற்றைச் சொன்னார். அநபாயன் “புத்திமான் பலவான்”
எனும் கதையையும், வெற்றி வேற்கையில் முதல் ஐந்தினையும் சொன்னார்.அநிந்திதை
ஆத்திசூடியினை முழுமையாகக் கூறினார்.
நிகழ்வில் சொல்லப்பட்ட பாடல்கள் அனைத்துக்கும்
தலைவர் விளக்கம் கூறினார்.தொடர்ந்து செயலாளர் உறுப்பினர்களின்
ஒத்துழைப்பின்மையும்,நேரம் இன்மையும் கவனக்குறைவும்தான் நிகழ்வின் இடைவெளிக்குக்
காரணம் எனக் கூறி,நன்றியுரையையும் கூறினார்.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 02.03.1990. செயலாளர்
ஒன்பதாவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம்,
ஹோல் புறுக் ஆசிரிய விடுதியில், திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில்,02.03.1990. வெள்ளிக்கிழமை மாலை 6.15.மணியளவில் அநிந்திதையின் தேவார இசையுடன்
ஆரம்பமாகியது.
செயலாளரின் கூட்ட அறிக்கை வாசிப்பைத் தொடர்ந்து
அநபாயன் “வாயே வாழ்த்து கண்டாய்”, “நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்”ஆகிய
தேவாரங்களைப் பாடினார். அநிந்திதையும் அதே தேவாரங்களைப் பாடினார்.
காண்டீபன் “பேராண்மை என்பதறுகண்”, “எப்பொருள்”,
“ஐயத்தின் நீங்கி”ஆகிய குறள்களைச் சொன்னார்.அநிந்திதை “வாக்குண்டாம்”பாடலைப்
பாடினார்.அநபாயன் கொன்றை வேந்தன் முழுவதையும் கூறினார்.
காண்டீபன் முதலாம் உலக மகா யுத்தம் பற்றி பேசினார்.
தொடர்ந்து இடைவேளை விடப்பட்டு பிஸ்கட்
பரிமாறப்பட்டது.
அடுத்து அநபாயன் “நன்றி ஒருவற்கு”,
“சாதியிரண்டொழிய”ஆகியவற்றைச் சொன்னார்.அநிந்திதை “பித்தாப் பிறை சூடி”,”மாசில்
வீணையும்”ஆகிய தேவாரங்களை இசைத்தார். அநபாயன் நம்பியாண்டார்நம்பியின் கதையைக்
கூறினார்.
தொடர்ந்து அநிந்திதை குடும்ப கீதத்தை
இசைத்தார்.தலைவர் நிகழ்வில் இடம்பெற்ற பாடல்களுக்கு விளக்கம் அளித்தார்.நிகழ்வு
நேரத்துடன் ஆரம்பித்து முடிவடைந்தது மகிழ்ச்சி எனவும் சொன்னார்.
செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து
அநிந்திதையின் தேவார இசையுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா பூ.தர்மராஜா
தலைவர் 09.03.1990. செயலாளர்
பத்தாவது கூட்ட அறிக்கை:
ஹோல் புறுக் ஆசிரிய
விடுதியில்,திரு.நா.தர்மராஜா அவர்களது தலைமையில், 09.03.1990.வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் எமது சங்கக் கூட்டம் அநிந்திதையின்
தேவார இசையுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 07.03.1990.அன்று கவியோகி சுத்தானந்த பாரதியாரின் அமரத்துவ
நினைவிற்காக இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.தலைவர் அவர்கள்
கவியோகி பற்றிய முக்கிய செய்திகளைக் கூறினார்.
அடுத்து செயலாளர் கூட்ட அறிக்கை வாசித்தார்.தொடர்ந்து
அநபாயன் “நன்றுடையானை”,”செவிகாள் கேண்மின்களோ”ஆகிய தேவாரங்களைப் பாடினார்.
அநிந்திதை “மாதர்ப் பிறைக்கண்ணி யானை”, “ஆலந்தானுகந்து’ஆகிய தேவாரங்களைப்
பாடினார்.
தொடர்ந்து காண்டீபன் “பண்டு நால்வரும்”எனும்
தேவாரத்தையும், “மரமது மரத்தில் ஏறி”எனும் தனிப்பாடலையும் கூறினார்.அநபாயன் சில
குறள்களைக் கூறினார்.காண்டீபன் இரண்டாம் உலகப்போர் பற்றிப் பேசினார்.
அடுத்து அநபாயன் “ஆளையாவுனக் கமைந்தன”எனும்
இராமாயணப் பாடலையும், “கரும்பும் இளநீரும்”,எனும் பிள்ளையார் கதை காப்புப்
பாடலையும், “நற்றவத்தினம்பலத்து”எனும் பிள்ளையார் புராணக் காப்புப் பாடலையும் பாடி
மகிழ்வித்தார்.
அடுத்து இடைவேளை விடப்பட்டு கித்துள் வெல்லம்
பரிமாறப்பட்டது.
தொடர்ந்து அநிந்திதை “மஞ்சள் குளித்து
முகமினுக்கி”எனும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பாடலையும், “வட்ட வட்டப்
பந்து”எனும் பாடலையும் இசையுடன் பாடி இன்புறச் செய்தார்.
அடுத்து அநபாயன் “நஞ்சுண்ட கண்டர்”கதையைச்
சொன்னார். அநிந்திதை இரு தேவாரங்களைப் பாடினார். அநபாயனும் அநிந்திதையும் இணைந்து
குடும்ப கீதத்தைப் பாடினார்கள்.
தலைவர் பாடல்களுக்கு விளக்கம் தந்தார்.கூட்ட
நிகழ்வுகள் திருப்திகரமாக இல்லை எனவும் நன்றி உரையை ஏனைய உறுப்பினர்களும் மாறி
மாறி கூறவேண்டும் எனவும் கூறினார்.
சபையோர் குறிப்புரையில்,செயலாளர் ஒன்று விட்ட
கிழமைக்கு ஒரு தடவை நிகழ்வு வைத்தால் நல்லது என்றார். தலைவரும் அநிந்திதையும் அதை
ஏற்றகவில்லை. அநபாயன் ஏற்றுக்கொண்டார். காண்டீபன் உறுப்பினர்களின் ஒத்துழைப்பிலேயே
தங்கியுள்ளது என்றார்.
செயலாளரின் நன்றியுரையுடனும் அநபாயனின் தேவார
இசையுடனும் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 16.03.1990. செயலாளர்
பதினோராவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம் ஹோல்
புறுக் ஆசிரிய விடுதியில் தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில் 16.03.1990. வெள்ளிக்கிழமை மாலை 5.30. மணியளவில் அநபாயனின் தேவார இசையுடன்
ஆரம்பமாகியது.
செயலாளர் கூட்ட அறிக்கையை வாசித்தார்.
இடையில் தடங்கல் ஏற்பட்டு பின் தொடர்ந்தது. அநிந்திதை “மூக்கே நீ முரலாய்”,
“நெஞ்சே நீ நினையாய்” ஆகிய தேவாரங்களைப் பாடினார். அநபாயன் “மரமது மரத்தில்
ஏறி”எனும் பாடலைக் கூறினார்.
தொடர்ந்து அநிந்திதை வெற்றி வேற்கையில் முதல்
ஐந்தையும் சொன்னார். காண்டீபன் “கூலி மிகக் கேட்பார்” “அடக்க முடையார்” ஆகிய
பாடல்களைச் சொன்னார்.
அநபாயன் “வெள்ளைநிற மல்லிகையோ”எனும் பாடலைப்
பாடினார். காண்டீபன் சில குறள்களையும், “தாயினும் நல்ல”எனும் தேவாரத்தையும் பாடி
மகிழ்வித்தார்.
அடுத்து இடைவேளை விடப் பட்டு லவேரியா
பரிமாறப்பட்டது.
அநபாயன் “மூக்கே நீ முரலாய்”, “நெஞ்சே நீ
நினையாய்”ஆகிய தேவாரங்களைப் பாடினார்.
தொடர்ந்து காண்டீபன்
“கவிஞர்கள்”எனும் தலைப்பில் பேசினார்.
அநிந்திதை “வெள்ளை நிற மல்லிகையோ”எனும்
பாடலைப் பாடினார்.”காக்கும் கடவுள்”எனும் கதையையும் கூறினார். அநபாயன்
வெற்றிவேற்கைப் பாடல்கள் சிலவற்றையும் பாலுக்குப் பாலகன் வேண்டி அழுத கதையையும்
கூறினார்.
அடுத்து அநிந்திதை “வானைக்காவில் வெண்மதி”,”விண்ணுற
அடுக்கிய”ஆகிய தேவாரங்களையும் “ஏறுமயில் ஏறி”எனும் திருப்புகழையும்
பாடினார்.அநபாயனும் அநிந்திதையும் இணைந்து குடும்ப கீதத்தைப் பாடினார்கள்.
நிகழ்வு ஆரம்பமான பொழுதும் இடைவேளையின்
பின்பும் தடங்கல் ஏற்பட்டு குழப்பம் அடைந்ததால் தலைவர் கருத்துரை இடம்பெற நேரம்
போதவில்லை.
செயலாளரின் நன்றி உரையுடனும் அநபாயனின்
தேவாரத்துடனும் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 08.06.1990. செயலாளர்
பன்னிரண்டாவது கூட்ட அறிக்கை:
ஹோல் புறுக் ஆசிரிய விடுதியில்,தலைவர்
திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில்,08.06.1990.வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30.மணியளவில் அநிந்திதையின் தேவாரத்துடன் எமது
சங்கக் கூட்டம் ஆரம்பமாகியது.
செயலாளர் கூட்ட அறிக்கையை வாசித்தார்.தொடர்ந்து
உறுப்பினர்கள் ஆரம்பகால நிகழ்வுகளில் பாடிய பாடல்கள்,தேவாரங்கள்,கதைகள் போன்றன
மீண்டும் இந் நிகழ்வில் பாடவேண்டி ஏற்பட்டது.காரணம் சிறுவர்களாக உறுப்பினர்
இருப்பதால் அவைகளை மறந்து போயினர்.தலைவரின் அனுமதியும் பெறப்பட்டது என செயலாளர்
தெரிவித்தார்.
அடுத்துஅநபாயன்“பொன்னார்மேனியனே”,”கூற்றாயினவாறு”,”வேதம்
ஓதி”,”பூவினுக்கருங்கலம்””,விண்ணுற அடுக்கிய”ஆகிய ஐந்து தேவாரங்களை இசையுடன் பாடி
மகிழ்வித்தார்.
அநிந்திதை “விண்ணுற அடுக்கிய”,”கண்காள்
காண்மின்களோ”,”கைகால் கூப்பித் தொழீர்”,”தலையே நீ வணங்காய்”,”தோடுடைய
செவியன்”,”வானைக்காவில் வெண்மதி”ஆகிய ஆறு தேவாரங்களையும் பண்ணோடு பாடினார்.
அடுத்து காண்டீபன் “சிவாலயங்கள்”என்ற
தலைப்பில் நீண்ட பேச்சைத் தந்தார்.அநபாயன் “வண்டி வண்டி”,”ஓடி விளையாடு
பாப்பா”என்பவற்றைப் பாடி மகிழ்வித்தார். அநிந்திதை “தைத்திருநாள்”,”வீசி
ஆடும்””அம்மா இங்கே வா” ஆகிய பாடல்களைப் பாடி பாராட்டைப் பெற்றார்.
காண்டீபன் “பனித்திளந் திங்கள்”,”பண்டு
நால்வருக்கு”,”குனித்த புருவமும்”,ஆகிய தேவாரங்களைத்தெளிவாகக்கூறினார். அநபாயனும்
அநிந்திதையும் கதைகள் சொன்னார்கள்.
சிறு இடைவேளை விடப்பட்டு மாம்பழம்
பரிமாறப்பட்டது.
மூன்று பேரும் பல குறள்களைக் கூறினர்.சில
பாடல்களையும் பாடினர்.அநபாயனும் அநிந்திதையும் குடும்ப கீதத்தைப் பாடினர்.
அடுத்து தலைவர் அவர்கள் நிகழ்வு ஓரளவு சிறப்பாக
அமைந்தது என்று கூறி, பாடல்களுக்கு விளக்கமும் தந்தார்.
செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து அநபாயனின்
தேவார இசையுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 25.06.1990.
செயலாளர்
பதின் மூன்றாவது கூட்ட அறிக்கை:
ஹோல் புறுக் ஆசிரிய விடுதியில்,தலைவர்
திருநா.தர்மராஜா அவர்கள் தலைமையில் 25.06.1990.திங்கட்கிழமை மாலை 6.30.மணியளவில் அநிந்திதையின் தேவார இசையுடன் எமது
சங்கக் கூட்டம் ஆரம்பமாகியது.
கூட்ட அறிக்கை வாசிப்பினைத் தொடர்ந்து
அநபாயன் “வேயுறு தோழி பங்கன்”,”இல்லக விளக்கது”போன்ற தேவாரங்களையும், அநிந்திதை
“மந்திரமாவதுநீறு”,பிடியதனுருவுமை”போன்ற
தேவாரங்களையும் பாடினர்.
அடுத்து காண்டீபன் ஈழத்து முருகன் கோவில்கள்
பற்றி பேசினார்.அநபாயன் “வீமா வீமா ஓடி வா”,”கடலிற் பொங்கும் திரையைப் பார்”ஆகிய
பாடல்களையும், அநிந்திதை “குடை பிடித்து செருப்பும் இட்டு”,”சின்னக் கோழிக்
குஞ்சுகள்”ஆகிய பாடல்களையும் பாடி மகிழ்வித்தனர்.
காண்டீபன் “அங்கமும் வேதமும்””,நிரைகழலரவம்”ஆகிய
தேவாரங்களைப் பாடினார்.அநபாயனும் அநிந்திதையும் இரு பந்திகளை அழகாக
வாசித்தனர்.காண்டீபன் சில குறள்களைக் கூறி விளக்கமும் கூறினார்.
அநபாயன் நவராத்திரி பற்றிப் பேசினார்.
திருப்புகழ் சில பாடினார்.
இடைவேளை விடப்பட்டு கேக் பரிமாறப்பட்டது.
அநபாயன் கொன்றைவேந்தன் சொன்னார்.காண்டீபன் ஒரு
பந்தியை அழகாக வாசித்தார்.அநபாயனும் அநிந்திதையும் குடும்ப கீதத்தைப் பாடினர்.
தலைவர் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெறவில்லை.25.06.இன்று அநிந்திதையின் பிறந்த நாள்.எனக் கூறி
வாழ்த்தும் தெரிவித்தார்.நிகழ்வு இன்னும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று சொல்லி
பாடல்களுக்கு விளக்கமும் தந்தார்.
சபையோர் குறிப்புரையில் படிப்பில் கவனம் போதாது
எனப் பாடசாலையில் அறிந்ததாகவும் கவனம் எடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
செயலாளரின் நன்றியுரையுடனும் அநபாயனின் தேவார
இசையுடனும் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 13.07.1990. செயலாளர்
பதினான்காவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக்
கூட்டம்,ஹோல் புறுக் விடுதியில்,தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில்,13.07.1990.வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில்,
அநிந்திதையின் தேவார இசையுடன் ஆரம்பமாகியது.
செயலாளர் கூட்ட அறிக்கை வாசித்தார். தொடர்ந்து
அநபாயன் பஞ்ச புராணம் பாடித் துதித்தார்.அநிந்திதை “சொற்றுணை வேதியன்””,கால்களாற் பயன்”,
“மாசில் வீணையும்”ஆகிய தேவாரங்களை இனிமையாகப் பாடினார்.அநபாயன் சகல கலா வல்லி
மாலையில் சில பாடல்களைப் பாடி மகிழ்வித்தார். அநிந்திதை தமிழ் மொழி வாழ்த்தை
இனிமையாகப் பாடி பாராட்டைப் பெற்றார்.
அநபாயன் “தீராத விளையாட்டுப்பிள்ளை”, “வெள்ளைத்
தாமரைப் பூவில் இருப்பாள்”ஆகிய பாடல்களையும் பாடினார்.தொடர்ந்து காண்டீபன் “கடையிற்
சாமி”எனும் தலைப்பில் பேசினார்.
அடுத்து அநிந்திதை “அப்பா என்னை”என்ற அபிநயப்
பாடலைப் பாடி ஆடினார். அநபாயன் “குஞ்சியழகும்”, “ஆளையாவுனக்”,”முன்னமிட்ட தீ”ஆகிய
பாடல்களைப் பாடினார்.
இடைவேளை விடப்பட்டு பட்டர் புருட்
பரிமாறப்பட்டது.
தொடர்ந்து அநபாயன் சில குறள்கள் கூறினார்.
அநிந்திதை “முயலும் வந்தது”பாடலுக்கு அபிநயம் பிடித்தார். “கை வீசம்மா” எனும்
பாடலையும் பாடினார்.காண்டீபன் “தனந்தரும்”, “பச்சை மாமலைபோல்”ஆகிய பாடல்களைக்
கூறினார்.
அடுத்து அநபாயன் “காக்கையாரே”, “ஔவைக்
கிழவி”போன்ற பாடல்களைப் பாடினார்.காண்டீபன் சில குறள்கள் கூறினார். மூன்று பேரும்
அழகாக பந்தியை வாசித்துக் காட்டினர்.
அநபாயனும் அநிந்திதையும் தனித்தனி குடும்ப
கீதத்தைப் பாடினர்.தலைவர் பாடல்களுக்கு விளக்கம் தந்ததுடன் இரு நிகழ்வுகளுக்கும்
கால இடைவெளி அதிகம் என்றும் இனிமேல் தொடர்ந்து நிகழ்வு நடக்க வேண்டும் எனவும்
கூறினார்.
16.07.90.காண்டீபனின் பிறந்த தினம் என்பதும் நினைவு
படுத்தப் பட்டது.செயலாளர் நன்றியுரை கூறினார்.அநிந்திதையின் தேவார இசையுடன்
நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா பூ.தர்மராஜா
தலைவர் 22.09.1990. செயலாளர்
பதினைந்தாவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம்,
தலைவர் திருநா.தர்மராஜா தலைமையில் ஹோல் புறுக் விடுதியில் 22.09.1990.சனிக்கிழமை பிற்பகல் 1.45.மணியளவில் அநிந்திதையின் தேவார இசையுடன்
ஆரம்பமாகியது.
அடுத்து செயலாளர் கூட்ட அறிக்கை வாசித்தார். தொடர்ந்து
அநபாயன் “வளவ நின் புதல்வன்””,வைப்புழிக் கோட்படா”ஆகிய பாடல்களைப் பாடி
மகிழ்வித்தார். அநிந்திதை “நீடாழி உலகத்து”, “சீர்க்குமரேசன் கொண்ட”ஆகியவற்றைக்
கூறி மகிழ்வித்தார்.
தொடர்ந்து அநபாயன் சில குறள்களைக்
கூறினார்.அநிந்திதையும் காண்டீபனும் “வளவ நின் புதல்வன்,” ”வைப்புழிக் கோட்படா” ஆகியவற்றைக்
கூறினர்.
இடைவேளை விடப்படவில்லை.
தொடர்ந்து அநிந்திதை சகல கலா வல்லி மாலையில்
முதல் ஐந்து பாடல்களையும், அநபாயன் மிகுதி ஐந்து பாடல்களையும் ஒழுங்காகவும்
அழகாகவும் பாடினர்.
அடுத்து காண்டீபன் செல்லப்பா சுவாமிகள் பற்றி
பேசினார்.தொடர்ந்து அநிந்திதை “மழை பொழியுது”,”அப்பா என்னை”ஆகிய பாடல்களைப் பாடி
ஆடி மகிழ்வித்தார்.அநபாயன் தீராத விளையாட்டுப்பிள்ளை என்ற பாடலில் உள்ள ஐந்து
பகுதிகளை அழகாகப் பாடினார்.
காண்டீபன் “பரமனை மதித்திடா”, “கையுந் தலை
மிசை”, பண்ணும் பதமேழும் ஆகியவற்றைக் கூறினார்.அநிந்திதை குடும்ப கீதத்தை
இனிமையாகப் பாடினார்.
அடுத்து தலைவர் கருத்துரை இடம் பெற்றது.இரு
நிகழ்வுகளுக்கும் நீண்ட இடைவெளி வந்து விட்டது.இருப்பினும் சகல கலா வல்லி மாலை
பத்துப் பாடல்களையும் ஒழுங்காக, அழகாக பாடியதும், பாரதம்,கந்தபுராணம், நாலடியார்
ஆகியவற்றில் உள்ள பாடல்களைப் பாடியதும் சிறப்பானது என்றார்.மேலும் சரஸ்வதி பூஜை
எமது வீட்டில் நடைபெற இருக்கிறது எனவும் கூறினார்.
சபையோர் குறிப்புரையில் உறுப்பினர்களின்
குழப்படி பற்றி பேசப்பட்டது.
செயலாளர் நன்றியுரை கூறினார்.அநபாயனின் தேவார
இசையுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 02.08.1991 செயலாளர்
பதினாறாவது கூட்ட அறிக்கை:
ஹோல்புறுக் விடுதியில், தலைவர் திரு.நா.தர்மராஜா
அவர்களின் தலைமையில் எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம், 02.08.1991வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று
மணியளவில்,அநிந்திதையின் தேவார இசையுடன் ஆரம்பமாகியது.
செயலாளர்கூட்டஅறிக்கைவாசித்தார் .தொடர்ந்து அநபாயன்“
காதலாகிக் கசிந்து”
“நிரைகழலரவம்”,”நத்தார் படை” ஆகிய தேவாரங்களை
பிழையின்றி பாடிக் காட்டி நிகழ்வைச் சிறப்பித்தார்.
அடுத்து அநிந்திதை “வானைக் காவில் வெண்மதி”, “முத்தி
நெறி”ஆகியவற்றைப் பாடி மகிழ்வித்தார்.தொடர்ந்து,அநிந்தி மூதுரைப் பாடல்கள்
சிலவற்றைச் சொன்னார்..
இடைவேளை விடப்பட்டு சீத்தாப் பழம்
பரிமாறப்பட்டது.
தொடர்ந்து சபையோர் குறிப்புரை இடம் பெற்றது.
அநபாயனும், அநிந்திதையும் உறுப்பினர் காண்டீபன் பரீட்சை முடித்து மாற்றலாகிச்
சென்று விட்டார் எனத் தமது கவலையைத் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம்
சிறப்பாக நடைபெற வேண்டும் என செயலாளர் வேண்டிக் கொண்டார்.
அடுத்து தலைவர் உரையாற்றினார்.பழைய உறுப்பினர்
காண்டீபன் க.பொத.சா.தரப் பரீட்சை முடித்து தமது வீட்டிற்கு வவுனியாவுக்கு சென்று விட்டார்.மறுமொழி
சிறப்பாக வந்துள்ளது.க.பொ.த.உயர் தரம் படிக்கின்றார்.எம்மை விட்டுச் சென்றாலும்
படிப்பது மகிழ்ச்சி.அதற்கு கை தட்டிப் பாராட்டுத் தெரிவிக்கும்படி
கூறினார்.பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அநபாயன் முதலாம் பிள்ளையாக வந்தமைக்கும்,
அநிந்திதை கூடிய புள்ளிகளைப் பெற்றமைக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அத்துடன்
இக் கூட்டமே ஹோல்புறுக் வீட்டில் இறுதிக் கூட்டம்.வவுனியாவுக்கு வந்த பின்பும்
தொடர்ந்து நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
செயலாளர் நன்றியுரை கூறினார்.அநபாயனின் தேவார இசையுடன்
கூட்டம் இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா பூ.தர்மராஜா
தலைவர் 09.06.1995. செயலாளர்
வேலை மாற்றம் காரணமாக வவுனியாவுக்கு வந்து
விட்டோம்.அக் காலச் சூழல்,வதிவிடப் பிரச்னை,போன்ற பல காரணங்களினால் மூன்று
வருடங்களுக்கு மேல் எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம் நடைபெறவில்லை.பின்பு
பல புதிய உறுப்பினர்களுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
புதிய நிர்வாகம்:
தலைவர்; திரு.நா. தர்மராஜா
செயலாளர்:திருமதி.பூ.தர்மராஜா.
உறுப்பினர்கள்:
செல்வன்.த.அநபாயன்.(உப செயலாளர்)
செல்வி.த.அநிந்திதை.
செல்வன்.சு.குமர்நாத்.
செல்வன்.ச.செந்தூர்ச் செல்வன்.
செல்வன்.ச.அருள்மொழி வேந்தன்.
செல்வி.ச.வித்தியாநந்தினி.
கௌரவ உறுப்பினர்கள்:
செல்வி.சி.அகல்யா.
செல்வி.ந.தேவகி.
பதினேழாவது கூட்ட அறிக்கை
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம்
நீண்ட கால இடைவேளைக்குப் பின் அதாவது மூன்றரை வருடங்களுக்குப் பின், வவுனியாவில்
உள்ள சிந்தாமணி கோவில் வீதி,தோணிக்கல்
எனும் இடத்தில் அமைந்துள்ள எமது வாடகை வீட்டில் 09.06.1995 வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏழு மணி முப்பது
நிமிடமளவில், தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில் அநிந்திதை அவர்களின்
தேவார இசையுடன் இனிதே ஆரம்பமாகியது.
கல்மடுவைச் சேர்ந்த அருட் கவிஞர்
பொன்.தில்லையம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தார்.
ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்குப்பின் இந்
நிகழ்வு இடம்பெற்றதனால்,தலைவர் அக்காலச் சம்பவங்களை எல்லாம் தனதுரையில்
எடுத்துரைத்தார்.
இந் நீண்ட கால இடைவேளையில் பல நல்ல
நிகழ்வுகளும்,சில தீய நிகழ்வுகளும் இடம்பெற்றன.பழைய உறுப்பினர் காண்டீபன்
க.பொ.த.உயர்தரம்-வர்த்தகப் பிரிவு படித்து சித்தி எய்தி விட்டார்.அநபாயன் 1992ல் புலமைப் பரிசில் பரீட்சையில் 153 புள்ளிகளைப் பெற்று சித்தி எய்தினார்.அநிந்திதைக்கு
1993ல் தமிழ்த்தினப் போட்டியில்-குழு நடனம்நிகழ்வில்
அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் கிடைத்தது.1994 ல் தமிழ்த் தின கட்டுரைப்போட்டியில்மாகாண
மட்டத்தில் மூன்றாம் இடம் கிடைத்தது.
தலைவர் அவர்களுக்கு 1993ல் இந்து கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட தமிழ்
சாகித்ய விழாவில் தமிழ்மணிப் பட்டம் வழங்கப்பட்டது.1992 ல் வெளியிட்ட அன்றில் பறவைகள் நாடக நூலுக்கு
தேசிய சாகித்ய மண்டலப் பரிசு 12.01.1995ல்கிடைத்தது .முப்பதாயிரம் ருபா ரொக்கப் பணமும்
சான்றிதழும் கிடைத்தது. ரி.வி.வாங்கப்பட்டது.
தலைவர் அவர்கள் பல தடவைகள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
வானொலியி ல் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். ரூபவாகினியில் பேட்டி ஒன்றையும்
கொடுத்தார்.1993ல் சித்திரை வருடப்பிறப்பிற்கு இலங்கை ரூபவாகினிக் கூட்டுத் தாபனத்தில் “வந்தது வசந்தம்”எனும் நிகழ்ச்சியில்
தலைவரும்,செயலாளரும்,காண்டீபனின் சகோதரனும்,சகோதரியும் பங்கு பற்றி நடித்தனர்.
“அன்றில் பறவைகள்””,இலக்கியச்
சிமிழ்”,”தென்றலும் தெம்மாங்கும்”,”முத்தமிழ் வித்தகர்””,இலக்கிய நாடகங்கள்”,”பன்னிரு
திருமுறை அறிமுகம்”,”ஆத்திசூடி”,”மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்”ஆகிய
எட்டு நூல்கள் தலைவர் அவர்களினால் வெளியிடப் பட்டன.
அநிந்திதை அவர்கள் பரதம் படித்து முதலாம்
வகுப்புப் பரீட்சையில் முதலாம் பிரிவில் சித்தி எய்தினார். சங்கீதமும் படித்து
வருகிறார்.அநபாயன் மிருதங்கம் பயின்று கொண்டிருக்கிறார். அநபாயன் ஆங்கில தின
கட்டுரைப் போட்டி,DIALOGUEபோட்டிகளில் பங்கு பற்றி மாவட்ட மட்டத்தில்
முதலாம்,இரண்டாம் இடங்களைப் பெற்றார்.
இத்தகைய பல நற் காரியங்களுக்கிடையில் சில
கவலைக்குரிய நிகழ்வுகளும் இடம்பெற்றன. செயலாளர் அவர்களுக்கு 1994 ல் பெரிய சத்திர சிகிச்சை நடைபெற்றது. அதேநிமிடத்தில்
அநபாயனுக்கும் சிறு விபத்து ஏற்பட்டு சிறு காயமும் ஏற்பட்டது
பழைய உறுப்பினர் காண்டீபனை அடுத்த நிகழ்வுக்கு
வரவழைக்க வேண்டும் எனவும் எம்முடன் இருக்கும் குமர்நாத் பங்கு கொள்ள வேண்டும்
எனவும் கேட்கப்பட்டது.
குடும்ப கீதம் நல்ல முறையில் இசையமைக்கப்பட்டு
மிருதங்க இசையுடன் இனிமையாகப் பாடப்பட வேண்டும் எனவும் செயலாளரின் ஒத்துழைப்பு
வேண்டும் எனவும் கேட்கப்பட்டது.
மேலும், அறிக்கை முழுமையாக எழுதப்பட
வேண்டும்,ஒரு காலத்தில் தொகுத்து புத்தகமாகக் கூட வெளியிடலாம் எனவும்
கூறப்பட்டது.முன்பு பெரிய எழுத்தில் பாடல்கள் எழுதித் தொங்க விடப்
பட்டிருக்கும்.உறுப்பினர்கள் பாடமாக்கும் வழக்கம் இருந்தது.நிகழ்வில் இடம் பெறும்
பாடல்களுக்கு தலைவர் கருத்துரை வழங்கும் வழக்கமும் இருந்தது.தற்போது இல்லாமற்
போய்விட்டது.இவை கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் கேட்கப்பட்டது.
நண்பன் சண்முகநாதன்,துணைவியார்,பிள்ளைகள்
நிகழ்வில் கலந்து கொண்டமை,அகல்யா கலந்து கொண்டமை மகிழ்ச்சியான விடயம் என்றார்.
வழமையாக சிறப்புடன் நடக்கும் சரஸ்வதி
பூஜை,செயலாளரின் சுகவீனம் காரணமாக 1994ல் நடைபெறவில்லை என வருத்தம்
தெரிவித்தார்.தலைவரது பேச்சைத் தொடர்ந்து செயலாளர் கூட்ட அறிக்கை வாசித்தார்.
அடுத்து அநபாயன் மிருதங்க இசை தந்து நிகழ்வை
மங்களகரமாக்கினார்.அநிந்திதை குடும்ப கீதத்தை இசைத்தார்.
நண்பன் சண்முகநாதன்அவர்களின் மகனும் புதிய உறுப்பினருமாகிய செந்தூர்ச்
செல்வன் “களியானைக் கன்றை”எனும்தேவாரத்தையும்“கறுப்புபூனைவருகிறார்”எனும் பாடலையும்
பாடினர்.தலைவரின் வேண்டுதலின்படி சபையினர்
கரகோசத்தினால் அவரை உற்சாகப் படுத்தினர்.
தொடர்ந்து சண்முகநாதன் அவர்களின் இரண்டாவது மகன்
அருள்மொழி வேந்தன் “பித்தாப் பிறை சூடி”எனும் தேவாரத்தைப் பாடினார்.சபையோர்
பாராட்டினர்.கரப்பங் காட்டில் இருந்து வருகை தந்த கௌரவ உறுப்பினர் அகல்யா சிவதாசன்
“உழவுத் தொழில்”எனும் தலைப்பில் சிறந்த பேச்சு ஒன்றைத் தந்தார்.அவரும் பாராட்டப்
பட்டார்.
அடுத்து அநிந்திதை சங்கீத வகுப்பில் கற்கும் சுர
வரிசை சில பாடினார்.அநபாயன் “கிழவியின் மீது தொடுக்கப்பட்டபொய்வழக்கு”எனும்கதையைக்கூறி,பொய்
சொல்லக்கூடாது என்பதை விளக்கினார்.வித்தியாநந்தினி சண்முகநாதன் சொற்றுணை வேதியன்
எனும் தேவாரத்தைப் பாடினார்.நிதிலாநந்தினி சண்முகநாதன் இடையிடையே குழப்பம்
விளைவித்தார்.தலைவர் குறுக்கிட்டு சிறுபிள்ளை என்பதால் அவரை மன்னித்து நிகழ்வு
தொடரலாம் என்றார்.
அடுத்து அகல்யா ஆங்கிலக் கவிதை ஒன்றினை அழகாகக்
கூறினார்.”தொப்பி வியாபாரியும் குரங்குகளும்”என்ற கதையை அருள் மொழி வேந்தன்
சொன்னார்.
பிரதம விருந்தினர் அருட்கவி பொன்.தில்லையம்பலம்
அவர்களைப்பற்றி தலைவர் எடுத்துரைத்தார்.கல்மடுவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்
பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்தார்.ஆனால் சுயமாக வாசிப்பு மூலமும்
கேள்வி ஞானம் மூலமாகவும் சிறந்த அறிவு பெற்றவர்.சிறந்த கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்.திருப்புகழை
உருக்கமாகப் பாடுவார்.திருப்புகழ் சந்தத்தில் பல கவிதைகளை
எழுதியுள்ளார்.சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலுக்கு திரு ஊஞ்சற்பா இயற்றி
புத்தகமாக்கப் பட்டது.
அடுத்து அவர் தான் கதிர்காமம் சென்றபோது அங்கு
கண்ட காட்சியை திருப்புகழ் சந்தத்தில் இயற்றிய பாடலை மனமுருகப் பாடினார்.சபை மெய்
மறந்து ரசித்தது.
ஐந்து நிமிட இடைவேளை விடப்பட்டு வாழைப்பழம்
பரிமாறப்பட்டது.தொடர்ந்து அநபாயன்,அநிந்தி,அகல்யா ஆகியோர் சிவபுராணத்தில் ஒரு
பகுதியைப் பாடினர்.அநபாயன் நகைச்சுவைத் துணுக்குகளைச் சொன்னார்.அநிந்திதை
நாட்டியக் கலை ஒரு ஜீவன் எனும் பாடலைப் பாடினார்.
சபையோர் குறிப்பில் செயலாளர் அங்கத்தவர்கள்
ஒத்துழைப்பை நல்க வேண்டும்,குறை நிறைகள் பேசித் தீர்க்கப் படவேண்டும்
எனவும்,உடல்நலக்குறைவினால் குறைகள் ஏற்பட்டிருக்கலாம்,இயன்றவரை ஒத்துழைப்பு
வழங்குவேன் எனவும் தலைவர் அவர்கள் பெற்ற பரிசுகள்,கெளரவங்கள் என்பவை குறித்து
வெள்ளித் தமிழ்ச் சங்கம் பாராட்ட வேண்டும் எனவும் கூறினார்.
அடுத்து பிரதம விருந்தினர் உரை
இடம்பெற்றது.தலைவர் படிப்பில் கவனம் வேண்டும்.தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைக்க
வேண்டும் என எடுத்துரைத்தார்.நேரம் ஒன்பதைத் தாண்டி விட்டது செயலாளரின்
நன்றியுரையினைத் தொடர்ந்து அநிந்திதையின் தேவாரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் ‘
23.06.1995. செயலாளர்
பதினெட்டாவது கூட்ட அறிக்கை:-
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம்
தலைவர் நா.தர்மராஜா அவர்களின் தலைமையில் தோணிக்கல் வீட்டில் 23.06.1995.வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில் அநிந்திதையின்
தேவார இசையுடன் இனிதே ஆரம்பமாகியது.
பம்பைமடுவைப் பிறப்பிடமாகவும்,சூசைப் பிள்ளையா
குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டவரும் தலைவரின் சகோதரருமான திரு.நா.யோகராஜா அவர்கள்
பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
செயலாளர் மிகவும் நீண்ட கூட்ட அறிக்கையை
வாசித்தார்.அநிந்திதை குடும்ப கீதத்தைப் பாடினார்.அநபாயனின் மிருதங்க இசை மங்கல
இசையாக இடம்பெற்றது.
அடுத்து தலைவர் அவர்கள் தமது உரையுடன்
வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.எமது நிகழ்விற்கு சிறப்பு
விருந்தினர்களாக,தலைவரின் இன்னொரு சகோதரர் திரு,நா.நடராஜா, நண்பன்
செ.சண்முகநாதன்,பொன்.தில்லையம்பலம்,ஆகியோர் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வுதொடர்ந்துநடைபெறவேண்டும்,கௌரவஉறுப்பினர்களாகதமிழினி,
மிதிலினி, வானதி, கிருத்திகன், ஆதவன், நித்தியன் போன்றோர் கலந்து கொள்ள வேண்டும், உறுப்பினர்கள்
தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் தலைவர் அவர்கள் கேட்டுக்
கொண்டார்கள்.
அடுத்துச.செந்தூர்ச்செல்வன்“ஐந்துகரத்தனை”எனும்திருமந்திரத்தைப்பாடினார்.அருள்மொழிவேந்தன்
“ஊரைக் காத்த சிறுவன்”எனும் கதையினைக் கூறினார். கௌரவ உறுப்பினர் அகல்யா
மாரியம்மன் திருவிழா பற்றிய மிக நீண்ட பாடலை அழகாகப் பாடிக் காட்டினார்.
தொடர்ந்து அநபாயன் “திருவே என் செல்வமே”எனும்
தேவாரத்தைப் பாடினார்.கௌரவ உறுப்பினர் ந.தேவகி அவர்கள் “இராமாயணத்தில் இராமன்”
எனும் தலைப்பில் அழகாகப் பேசினார்.
செந்தூர்ச்செல்வன் “நரியும் ஆடும்”எனும் கதையைச்
சொன்னார்.அநபாயனும் அநிந்திதையும் “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” எனும் உலக
நீதிப் பாடல்கள் சிலவற்றைச் சொன்னார்கள்.அருள்மொழி வேந்தன் “மாசில் வீணையும்”
தேவாரத்தைப் பாடினார்.
தொடர்ந்து இடைவேளை விடப்பட்டு,பிரதம
விருந்தினராகக் கலந்து கொண்ட யோகராஜா அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பகோடா
பரிமாறப்பட்டது.
இடைவேளையினைத் தொடர்ந்து அகல்யா “சலம்பூவொடு தூப”எனும்
தேவாரத்தைப் பாடினார்.அநிந்திதை மாலையில் தான் கண்ணுற்ற காட்சிகள் பற்றிய சிறு
பேச்சை தெளிவாகப் பேசினார்.அநபாயன் ஆங்கிலக்கவிதை ஒன்றை அழகாகக் கூறினார்.
அநிந்திதை,தேவகி இருவரும் “ஆடிக்கொண்டார்”எனும்
சங்கீதப் பாடலை இனிமையாகப் பாடினர்.
அடுத்து பொன் தில்லையம்பலம் அவர்கள்,இந்நிகழ்வு
சிறப்பானது,எல்லோர் வீடுகளிலும் இடம்பெறவேண்டும் எனப் பாராட்டியதுடன் தான்
திருப்புகழ் சந்தத்தில் இயற்றிய சில பாடல்களை பக்திச் சுவையுடன் பாடினார்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யோகராஜா
அவர்கள்,இச்சங்கம் மலைநாட்டில் உருவாகியது பின் தொடர முடியாமல் தடைப்பட்டு
மீண்டும் உதயமாகியது மகிழ்ச்சி எனவும் ஒற்றுமை வளர இச்சங்கம் உறுதுணையாக இருக்க
வேண்டும் எனவும் கூறினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடராஜா
அவர்கள் சந்தர்ப்ப வசமாக வந்தாலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டமை
மகிழ்ச்சி எனவும்,செயலாளரின் கூட்ட அறிக்கை மூலம் கடந்த கூட்ட நிகழ்வுகளைக் கண்
முன்னே காணக்கூடியதாக இருந்தது எனவும் கூறினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்த
சண்முகநாதன் அவர்கள்,இச்சங்கம் குடும்பமாக இயங்குதல் வேண்டும், யாழ்பல்கலைக்கழகத்தில்
தமிழ்மன்றத் தலைவராக தர்மராஜா (இச்சங்கத்தின் தலைவர்) அவர்களும் தான்
செயலாளராகவும் இருந்த கால நினைவுகளைக் கூறி உறுப்பினர்களை ஊகுவிக்க பரிசில்கள்
வழங்க வேண்டும் என ஆலோசனையும் வழங்கினார்.
தொடர்ந்து சபையோர் குறிப்புரை
இடம்பெற்றது.குமர்நாத் அவர்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும் எனக்
கூறப்பட்டது.பாடசாலை,மாவட்ட ரீதியில் பரிசு பெறுபவர்களுக்கு நாமும் பரிசளிப்போம்
எனவும், இந்நிகழ்வு சிறப்பானது எனவும், உறுப்பினர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க
வேண்டும்,பாடசாலையில் குழப்படி இல்லாது இருத்தல் வேண்டும்,பாடசாலை சம்பவம்
சிலவற்றைக் கூறி,நல்ல ஒழுக்கத்தின் பின்புதான் கல்வி எனவும் அறிவுரை கூறப்பட்டது.
அடுத்து செயலாளர் நன்றியுரை
கூறினார்.அநிந்திதை,தேவகி ஆகியோரின் தேவார இசையுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 07.07.1995. செயலாளர்
பத்தொன்பதாவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்ட
நிகழ்வு, தோணிக்கல் வீட்டில், திரு.நா.தர்மராஜா அவர்களின் தலைமையில்,
அநிந்திதையின் தேவார இசையுடன்,07.07.1995.வெள்ளிக்கிழமை மாலை எட்டு மணியளவில் ஆரம்பமாகியது.
இந்துமாமன்றத் தலைவர் சீ.ஏ.இராமஸ்வாமி அவர்கள்
தெய்வாதீனமாக வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.உடன் வேண்டுதலுக்கிணங்க பிரதம
விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
செயலாளர் கூட்ட அறிக்கையினை
வாசித்தார்.தொடர்ந்து தலைவர் தமது உரையுடன் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.பிரதம
விருந்தினரை வரவேற்றதுடன்,கடந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த பொன் தில்லையம்பலம்
அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதது கவலை எனவும்,சீ.ஏ.இராமஸ்வாமி ஐயா
அவர்கள் கலந்து கொள்வது சிறப்பானது எனவும்,வீடு மாற வேண்டி இருப்பதால் நிகழ்வு
சுருக்கமாக இடம் பெறும் எனவும் கூறினார்.மேலும் இந் நிகழ்விலாவது தாயார் அவர்கள்
கலந்து கொள்ளக் கிடைத்தது மகிழ்ச்சி எனவும் கூறினார்.
அநிந்திதை அழகாக குடும்ப கீதம் இசைத்தார்.மங்கல
இசையாக அநபாயனின் மிருதங்க இசை அமைந்தது.
செந்தூர்ச் செல்வன் “சலம்பூவொடு
தூபமறந்தறியேன்”எனும் தேவாரத்தைப் பாடினார்.அருள்மொழி வேந்தன் “பக்தியால்
யானுனை”எனும் திருப்புகழைப் பாடினார்.அகல்யா “பூச இனியது நீறு” எனும் தேவாரத்தைப்
பாடினார்.
வீடு மாற்ற வேலையினால் நிகழ்வு கால தாமதமாக
தொடங்கியதால் இடைவேளை விடப்படவில்லை.
அநிந்திதை சில சுரவரிசை,சிற்றாடை கட்டியல்லோ
எனும் நாட்டார் பாடல் ஆகியவற்றைப் பாடினார்.
கடந்த நிகழ்வில் பாடப்பட்டு பாராட்டைப் பெற்ற
அம்மன் பாடலை இந் நிகழ்விலும் அகல்யா அழகாகப் பாடினார்.அநபாயன் நான்கு
திருக்குறள்களைக் கூறினார்.குமர்நாத் சிறந்த நகைச்சுவைத் துணுக்குகளைக்
கூறினார்.முதன் முதல் இந் நிகழ்வில் பங்காளியாகக் கலந்து கொண்டமைக்கு
குமர்நாத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அகல்யா ஆங்கிலக் கவிதை ஒன்றினையும் கூறினார்.நிகழ்வு
நிறைவுறும் தருணத்தில் திரு.நா.நடராஜா.துணைவியார்,தேவகி,கிருத்திகன் ஆகியோர் வருகை
தந்தனர்.ஆறுமுக நாவலரின் சமயப்பணி பற்றி பேச்சு ஒன்றை தேவகி அவர்கள் சிறப்பாக
பேசினார்.இப் பேச்சினை அவர் நான்காவது உலக சைவ மகாநாட்டில் (கொழும்பில்)பேச
இருக்கிறார்.முதற் பரிசு பெற சங்கம் வாழ்த்தி அனுப்பியது.
பாடல்களில் உள்ள சிறு பிழைகள் திருத்தப்பட
வேண்டும்,உறுப்பினர்களுக்கு பரீட்சை நெருங்குகிறது,இவ் வீட்டில் (தோணிக்கல்)இந்
நிகழ்வே இறுதியானது,அடுத்த நிகழ்வு நாம் செல்லும் வீட்டில் இடம்பெறும்,என தலைவர்
அவர்கள் கூறினார்கள்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட
சீ.ஏ.இராமஸ்வாமி அவர்கள்,பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல்
ஆகிவிட்டது,தேவகியையும்,தலைவர் அவர்களையும் சந்திக்க விரும்பினேன் அதுவும்
நிறைவேறியது.அத்துடன் இவ்விதமான நிகழ்வில் கலந்தது மகிழ்ச்சி,நிகழ்வுகள் நன்றாக இருந்தன.அம்மன்
பாடலும்,பேச்சும் பிடித்தன என தனதுரையில் கூறினார்.
அடுத்து சபையோர் குறிப்புரை
இடம்பெற்றது.நிகழ்வுகள் சிறப்பாக ஆயத்தம் செய்யப்பட வேண்டும்,உறுப்பினர்களும்
குறிப்புரை வழங்க வேண்டும் எனக் கூறி,மீண்டும் பிரதம விருந்தினருக்கு தலைவர் நன்றி
தெரிவித்தார்.
செயலாளர் நன்றியுரை
கூறினார்.அநிந்திதை,அகல்யா,தேவகி ஆகியோரின் தேவார இசையுடன் நிகழ்வு இனிதே
நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 04.08.1995 செயலாளர்
இருபதாவது
கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம்
உக்கிளாங் குளம்(பண்டாரிகுளம்)வாடகை வீட்டில்,தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்கள்
தலைமையில்,04.08.1995 வெள்ளிக்கிழமை மாலை ஏழுமணி.இருபதுநிமிடமளவில் அநிந்திதை,அகல்யா ஆகியோரின் தேவார
இசையுடன் இனிதே ஆரம்பமாகியது.
திருமதி.புனிதவதிசிவதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகக்
கலந்து சிறப்பித்தார். செயலாளரினால் கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.
அநிந்திதை குடும்ப கீதம் இசைக்க ,அநபாயன் மிருதங்கம்
வாசித்தார்.
தலைவர் அவர்கள் தமதுரையில்,இந்த வீட்டில் இது
முதலாவது நிகழ்வு,வீடு மாறும் வேலைகளினால் நிகழ்வைச் சிறப்பாக்க முடியவில்லை,இவ்
வீட்டிற்கு வந்து ஒரு கிழமைக்குள்இந்நிகழ்வைஒழுங்குசெய்தமைவரவேற்கத்தக்கது,ஆதவன்,புனிதவதி(சாந்தம்)ஆகியோருக்கு
இது முதல் நிகழ்வு,தேவகிக்கு நாலாவது உலக சைவ மகா நாட்டில் மத்திய பிரிவுப்
பேச்சுப் போட்டியில் முதலாம் பரிசு கிடைத்துள்ளது.அவரை சங்கம் கௌரவிக்க வேண்டும்.என
பல விடயங்களைக் கூறினார்.
செந்தூர்ச் செல்வன் தேவாரம் பாடினார்.அருள்மொழி
வேந்தனும் ஒரு தேவாரம் பாடினார்.புதிய உறுப்பினர் ஆதவன்
தேவாரம்,புராணம்,திருப்புகழ் என ஒரே மூச்சில் சங்கிலித்தொடராகப் பாடி
முடித்தார்.சபையினர் உற்சாகப்படுத்தினர்.
அகல்யா பெற்றோரைப் பேணல் எனும் விடயம் பற்றி
பேசினார்.அநபாயன் “திமிர வுதிதி அனைய” எனும் திருப் புகழைப்பாடினார். அநிந்திதை உலகநீதியில்,
”ஓதாமல் ஒருநாளும்”, ”நெஞ்சாரப் பொய் தன்னை”ஆகிய பாடல்களைப் பாடினார்
இடையில் ஆதவன் சத்தம் செய்தமையினால்,தலைவர்
அவரைக் கட்டுப்படுத்தினார்.
அகல்யா “நீல மயில்”எனும் பாடலைப்
பாடினார்.அநபாயன் இரு தேவாரங்களைப் பாடினார்.
ஐந்து நிமிட இடைவேளை விடப்பட்டு வீட்டில்
தயாரிக்கப்பட்ட பகோடா பரிமாறப்பட்டது.
தொடர்ந்து ஆதவன் “ஒன்று என்று சொல்லுவோம்”எனும்
பாடலையும்.வித்தியாநந்தினி “மாசில் வீணையும்”எனும் தேவாரத்தினையும்
பாடினர்.அநிந்திதை “சாமகானப் பிரியே”எனும் சங்கீதப் பாடலைப் பாடினார்.
அடுத்து ஆதவன் “புள்ளிப் புள்ளி மானே”,”பாட்டி
சுட்ட வடை”,”பாட்டியம்மா கடையிலே”ஊர்வசி,அரபிக்கடலோரம் போன்ற பல பாடல்களை தனக்குத்
தெரிந்த பாணியில் தொடராகப் பாடி முடித்தார்.சபையினர் வயிறு குலுங்கச் சிரித்ததுடன்
பாராட்டையும் தெரிவித்தனர்.
அநிந்திதை“மாலைப் பொழுதின் மயக்கத்திலே” எனும் சினிமாப்
பாடலைப்பாடி பாராட்டைப் பெற்றார்
அடுத்து சபையோர் குறிப்புரை இடம்
பெற்றது.அநபாயன் முதலாம் பிள்ளையாக வந்துள்ளார் மகா வித்தியாலயத்தில் கூடிய
சராசரியைப் பெற்றுள்ளார்.ஆதவனுக்கும் நல்ல புள்ளிகள் கிடைத்துள்ளன.மற்ற
உறுப்பினர்களுக்கும் நல்ல புள்ளிகள் கிடைத்துள்ளன. போன்ற விடயங்கள் கதைக்கப்பட்டன.
அத்துடன்வித்தியாநந்தினி அண்ணன்மாரை”டேய்” என்று கூறுவது தவறு என்றும் எடுத்துரைக்கப்
பட்டது.
அடுத்து செயலாளர் நன்றியுரை
கூறினார்.அநிந்திதை,அகல்யா ஆகியோரின் தேவார இசையுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
நா.தர்மராஜா
பூ.தர்மராஜா
தலைவர் 25.08.1995. செயலாளர்
.
இருபத்தோராவது கூட்ட அறிக்கை:
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்க நிகழ்வு,உக்கிளாங்குள
வீட்டில்,தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்கள் தலைமையில்,25.08.1995 வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணி பதினைந்து
நிமிடமளவில் அநிந்திதையின் தேவார இசையுடன் இனிதே ஆரம்பமாகியது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர்
திரு.நா.சேனாதிராஜா அவர்கள் சிறிது காலந்தாழ்த்தி வந்தாலும் பிரதம விருந்தினராகக்
கலந்து நிகழ்வைச் சிறப்பித்தார்.
வ/சு.இ.இ.சங்கத் துணைச் செயலாளர்
திரு.நா.யோகராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
செயலாளர் கடந்த கூட்ட அறிக்கையினை வாசித்தார்.அநிந்திதை
குடும்ப கீதத்தை இசைக்க,அநபாயன் மிருதங்கம் வாசித்தார்.
அடுத்து செந்தூர்ச் செல்வன் பட்டினத்தார் பற்றி
பேசினார்.அருள்மொழி வேந்தன் “நிரைகழலரவம்”எனும் தேவாரத்தையும் உடலில் உறுதி
வேண்டும் எனும் பாடலையும் பாடினார்.
அகல்யா நவராத்திரி பற்றிய பேச்சொன்றைத்
தந்தார்.அநபாயன் இரு தேவாரங்களைப் பாடினார்.அநிந்திதை “வாழ்க நிரந்தரம்”எனும்
தமிழ்மொழி வாழ்த்தைப் பாடினார்.
எல்லா உறுப்பினர்களது நிகழ்ச்சிகளுக்கும்
சபையினர் கைதட்டி பாராட்டை வழங்கினர்.
ஐந்து நிமிட இடைவேளை விடப்பட்டு மிக்சர்
பரிமாறப்பட்டது.
தொடர்ந்து வித்தியானந்தினி தேவாரம் பாடுவதாகக்
கூறினார்.பின் பாடாமல் இருந்து விட்டார்.அடுத்து அகல்யா “திருமுருகா”எனும் பக்திப்
பாடலைப் பாடினார்.அநிந்திதை “மலர்ந்தும் மலராத”எனும் சினிமாப் பாடலைப்
பாடினார்.அத்துடன் தலைவர் அவர்கள் எழுதிய “இசைத்திட முடியாது”எனும் தமிழ்
வாழ்த்துப் பாடலையும் இசையுடன் பாடினார்.
அநபாயன் “பாரதி அல்ல பாரத்தீ நீ”எனும் தலைப்பில்
கவிதை வாசித்தார்.அகல்யா “அம்மா என்றழைக்காத”எனும் சினிமாப் பாடலைப் பாடினார்.
இந் நேரத்தில் தான் பிரதம விருந்தினரும்,சிறப்பு
விருந்தினரும் வருகை தந்தார்கள்.
அவர்களின் வேண்டுதலுக் கிணங்க பலமுறை பாடிய
அம்மன் பாடலை அகல்யா பாடினார்.அநபாயன் முதல் வாசித்த கவிதையில் ஒருபகுதியை
மீண்டும் வாசித்தார்.
தலைவர் விருந்தினரை வரவேற்று,சிறு குறிபையும்
கூறினார்.தேவகிக்கு கௌரவம் வழங்கக் காத்திருந்தோம்.ஆனால் அவர் வரவில்லை,பழைய
உறுப்பினர் காண்டீபன் தமிழ்,சமய பாடங்களில் க.பொ.த.சாதாரண தரத்தில் நல்ல சித்தி
பெற்றுள்ளார். உறுப்பினர்கள் போதிய ஆயத்தத்துடன் பங்கு கொள்ள வேண்டும் என பல
அறிவுரைகள் கூறினார்.
அடுத்து பிரதம விருந்தினர் உரை இடம்
பெற்றது.தவிர்க்க முடியாத காரணத்தால் காலதாமதமாக வந்ததாகவும்,முழு நிகழ்வையும்
கண்டு களிக்க முடியவில்லை எனவும் இது ஒரு பயிற்சி முகாம்,தமிழை வளர்க்க நல்ல
முயற்சி எனவும் குறிப்பிட்டார்.
நேரம் சென்றுவிட்டதால் சபையோர் குறிப்புரை
இடம்பெறவில்லை.அநபாயனும் அநிந்தியும் சண்டை பிடிப்பதாக அறிகிறேன்.அது நிறுத்தப்பட
வேண்டும்,சொற் பிழை எழுத்துப்பிழை இன்றி ஆயத்தத்துடன் உறுப்பினர்கள் நிகழ்வைத்
தரவேண்டும் என தலைவர் குறிப்பிட்டார்.
செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து,அநிந்திதை,அகல்யா
ஆகியோரின் தேவார இசையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
தலைவர் திகதி செயலாளர்
இக் கூட்ட அறிக்கை வாசித்து,தலைவர்,செயலாளர் கையொப்பமிடும்
வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டது. மனவருத்தமான விடயம் தான்.
பிள்ளைகளின் படிப்பு,ரியூசன்,நாம் இருந்த
வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையிலான நீண்ட தூரம்,உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும்
சிக்கல், நாட்டுச் சூழல். போன்ற பல தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது இல்ல
வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டம் மேற் கொண்டு நடைபெறவில்லை.
1995.08.25.ன் பின் எமது நிகழ்வு இடம்பெறவில்லை
என்பதால்,அக் காலப் பகுதியின் பின் எமது ஆரம்ப கால உறுப்பினர்கள்,இடைக்கால
உறுப்பினர்கள்,நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்கள் இக்காலப்பகுதியில்எப்படி
உள்ளார்கள்,இடைக்காலப் பகுதியில் நடந்த நிகழ்வுகள்,அனுபவங்கள் எப்படியானவை என்பதை
சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கத் தலைவர்
திரு.நா.தர்மராஜா அவர்கள் கடந்த நாற்பது ஆண்டு காலமாக கலை,இலக்கிய,சமயத் துறைகளில்
ஈடுபட்டு வருவதுடன் பல துறை சார்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது டன்பலசஞ்சிகைகள்
,மலர்களையும் தயாரித்துள்ளார். .
சொற்பொழிவாளராக, கவிஞராக, சிறுகதை எழுத்தாளாராக மரபு
இலக்கிய கட்டுரையாளராக, நாடக எழுத்தாளராக புராண படன வித்தகராக பல்வேறு
பரிமாணங்களில் தனது கலை இலக்கியப் பணிகளை மேற்கொண்டுவரும் இவர் “கலாநிதி”பட்டம்
உட்பட பதினேழு பட்டங்களைப் பெற்றுள்ளார்.
தேசிய சாகித்தியமண்டல விருது உட்பட பலதேசிய விருதுகளையும்,
சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
சமய,இலக்கிய சொற்பொழிவுக்காக சுவிஸ்
நாட்டிற்குச் சென்று வந்தார்.சுவிஸ் நாட்டில் இருக்கும் இவரது உடன் பிறவாத் தம்பி
திரு.க.குமார குலசிங்கம் அவர்களே இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இவரது கலை இலக்கிய
படைப்புகளுக்கு மிக ஆதரவாக அவர் விளங்குகிறார்.
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்க நிகழ்வில்
பங்குகொள்ள வேண்டும் எனும் பேரவா சுவிஸ் தம்பிக்கு இருந்தது.அது நிறைவேறும்
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.காலம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
தலைவர் அவர்களும் குடும்பமும் சுவிஸ் தம்பி
குடும்பமும் இந்தியா சுற்றுலா சென்றோம்.அத்துடன் எழுத்தாளர்
ஓ.கே.குணநாதன்,எழுத்தாளர் இரா.உதயணன் உட்பட,தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின்
பரிசினைப் பெறுவதற்காக இந்தியா சென்றோம்.மூவருக்கும் பரிசு கிடைத்தது.
தலைவர் அவர்களுக்கு “கங்கையின் மைந்தன்”எனும்
நாடக நூலுக்கு பரிசு கிடைத்தது.
தலைவர் அவர்கள் தாய்லாந்துக்கும் சென்று
வந்தார்.
மகன் குடும்பத்துடன் (அநபாயன்)மலேசியாவுக்கும்
சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியத் தொழிலில் இருந்து 30.09.2009 ல் ஓய்வு பெற்ற போதும் தமிழுக்கும்
சைவத்துக்கும் சமூகத்துக்கும் ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்.
ஆரம்ப கால உறுப்பினர் செல்வன்சே.காண்டீபன்
அவர்கள் உயர் கல்வி கற்று,சிலகாலத்தின் பின் லண்டன் சென்று,திருமணம் செய்து
குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
செல்வன்.த.அநபாயன் அவர்கள் கணிதத் துறையில்
கல்வி கற்று பொறியியல் பட்டப் படிப்பில் முதல் தரத்தில் சித்தி எய்தி புலமைப்பரிசில்
பெற்று அவுஸ்திரேலியா சென்று கலாநிதிப் பட்டப் படிப்பைப் (PhD IN STRUCTURAL ENGINEERING) பூர்த்தி செய்து அங்கு பொறியியலாளராக
இருக்கிறார்.
அவர் கணிதத் துறையில் கல்வி கற்றாலும் தமிழில்
ஆர்வமும் திறமையும் உடையவர்.பாடசாலையில் கற்கும் காலத்தில் தமிழ்த் தினப் போட்டிகளில்
பங்குகொண்டு (வினாவிடைப் போட்டி)தேசிய ரீதியில் பரிசு பெற்றுள்ளார்.இலக்கியத்தில்
அதி கூடிய புள்ளிகளைப் பெறுவது வழக்கம்.
அவர் டாக்டர் நித்தியாவை(M.B.B.S)திருமணம் செய்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து
வருகிறார்.
செல்வி.த.அநிந்திதைஅவர்கள்,பாடசாலையில்கல்விகற்கும்காலத்தில்,பேச்சு,கட்டுரை,நடனம்போன்ற
பல நிகழ்வுகளில் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத் தக்கது.நடனம்.கட்டுரை ஆகிய
போட்டிகளில் மாகாண ரீதியில் பரிசில்கள் பெற்றுள்ளார்.இலக்கிய ஆக்கத்திறன்
போட்டியில் தேசிய மட்டத்தில் பரிசில் பெற்றுள்ளார்.
செல்வன் குமர்நாத் உயர் கல்வி கற்று கொழும்பில் dialog companyயில் கடமை புரிகிறார்.
செல்வன் குமர்நாத் உயர் கல்வி கற்று கொழும்பில் dialog companyயில் கடமை புரிகிறார்.
அவர்தமிழ்சிறப்புப்பட்டதாரி.B.A.(HONS-TAMIL)(.முதல்மாணவியாகசித்திஎய்தியமை
குறிப்பிடத்தக்கது.அத்துடன்ஆங்கிலடிப்ளோமாபடித்துMeritல்சித்திஅடைந்துள்ளார்என்பதும்
குறிப்பிடத்தக்கது. தற்போதுசட்டத்தரணி(வழக்கறிஞர்)கேசவராஜன்(L.L.B.ATTORNEY.AT.LAWCOMMISSIONR FOR OATHS) என்பவரைத் திருமணம் செய்து திருகோணமலையில்
வசித்து வருகிறார்.
செல்வி.சி.அகல்யா உயர் கல்வி கற்று இலங்கை
வங்கியில் தலைமை லிகிதராக உள்ளார். இவர் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில்
பேச்சு,கட்டுரை,நடனம் போன்ற துறைகளில் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசில்களைப்
பெற்றுள்ளார் .பேச்சுப்போட்டியில் (சமயப் பேச்சுப்போட்டி) தேசிய மட்டத்தில் முதற்பரிசு பெற்றமை
குறிப்பிடத் தக்கது.
செல்வன்.சி.ஆதவன் பொறியியல் பட்டப் படிப்பை
படித்துக் கொண்டிருக்கிறார்.
செல்வி.ந.தேவகி.தனதுஉயர்கல்வியைவிஞ்ஞானத்துறையில்
படித்து தற்போது டாக்டராக(M.B.B.S) பணி புரிகிறார்.அவர் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில்
பேச்சு,கட்டுரை,நடனம் போன்ற பல போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்கள்
பெற்றுள்ளார்.தமிழ்த்தின மத்திய பிரிவு பேச்சுப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதற்
பரிசினைப் பெற்றமை குறிப்பிடத் தக்கது.
செல்வன்.ச. .செந்தூர்ச் செல்வன் உயர் கல்வி
கற்று ஆசிரியராகக் கடமை புரிகிறார்.
செல்வன்.ச.அருள் மொழி வேந்தன் உயர் கல்வி கற்று
அரச உத்தியோகம் பார்க்கின்றார்.
செல்வி.சவித்தியானந்தினி பல்கலைக்கழகத்தில்
கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார். பாடும் திறமை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வி.ச.நிதிலானந்தினி உயர் கல்வி
கற்கின்றார்.இவரும் பாடும் திறமை உள்ளவர்.பாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
எமது நிகழ்வில் கலந்து சிறப்பித்த
சீ.ஏ.ராமஸ்வாமி அவர்கள் தற்போது சிறந்த கவிஞராக இருப்பதும்
குறிப்பிடத்தக்கது.
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்கத்தின்
செயலாளராகிய திருமதி.தர்மராஜா பூரணேஸ்வரி ஆகிய நான் யாழ்.பல்கலைக்கழகத்தில்
பொருளியல் சிறப்புப் பட்டத்தினைப் படித்து முடித்தேன்.(1976-1980 காலப் பகுதி)
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்க ஆவணங்களை
கணணியில் பதிவு செய்யும் பாக்கியத்தைப் பெற்றமை மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்க நிகழ்வு
நிறுத்தப்பட்ட நீண்ட கால இடைவெளியில் பல நல்ல விடயங்களும்,பல சோக நிகழ்வுகளும்
இடம்பெற்றுள்ளன.
நாட்டுச்சூழல்பலதுன்பங்களைத்தந்தன.இடப்பெயர்வு,புலம்பெயர்வு,உயிரழப்புக்கள்,சொத்திழப்புக்கள்
கல்வி இழப்புக்கள்,போன்ற பல தீர்வற்ற இழப்புக்களில் இருந்து எவருமே தப்பவில்லை.
இந் நிலையில் எமது நிகழ்வுகளில் கலந்து
சிறப்பித்த திரு.நா.யோகராஜா அவர்கள் மன அழுத்தம் காரணமாக நோய்க்குள்ளாகி எம்மை
விட்டுப் பிரிந்து விட்ட நிகழ்வு என்றும் சோகமானது.
நிகழ்வில் கலந்து சிறப்பித்த கவிஞர்
பொன்.தில்லையம்பலம் அவர்களும் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
மீண்டும் எப்போதாவது ஒருமுறை எமது இல்ல வெள்ளித்
தமிழ்ச் சங்க நிகழ்வு இடம் பெற இறைவன் அருள் புரிய வேண்டும் என்பது எனது பேரவா.
எமது இல்ல வெள்ளித் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்
பங்கு கொண்டு சிறப்பித்தவர்கள் மற்றும் அனைவரும் சீர் பெற்று வாழ இறைவன் அருள்
வேண்டிப் பிரார்த்தித்து அமைகிறேன்.
திருமதி.பூரணேஸ்வரி தர்மராஜா அகளங்கன்.
25.06.2012