Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-வானொலியில்



மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமை ஆற்றிய காலத்தில் என்னோடு 1979 ல் வானொலிக்கு  மெல்லிசைப் பாடல் எழுதத் தொடங்கினேன்.   எனதுபத்து பாடல்கள் வரை ஒலிப் பதிவு செய்யப்பட்டன.அவற்றில், இந்தியத் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன் ராமமூர்த்தியில் ஒருவர்) யினால் இசையமைக்கப் பட்ட எனது “சேற்று வயல் காட்டினிலே நாற்று நட வந்த பெண்ணே” என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் மிகவும் பிரபலம் பெற்றது.வானொலி மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதில் பின் நான் அதிக ஆர்வம் காட்டாமல் வானொலி நாடகங்களை எழுதத் தொடங்கினேன். பல சமூக நாடகங்களையும் எழுதினேன்.பல இலக்கிய நாடகங்களையும் எழுதினேன்.அவை, “அன்றில் பறவைகள்”, “இலக்கிய நாடகங்கள்”, “கூவாத குயில்கள்” என்ற பெயர்களில் நூல்களாகவும் வெளியிடப் பட்டன.இவற்றில் “அன்றில் பறவைகள்” நாடக நூல் தேசிய சாகித்திய மண்டல விருதையும், “இலக்கிய நாடகங்கள்” வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருதையும் பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.
1984 ல் முதன் முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச் சேவையில்  பேசத் தொடங்கினேன். பல இலக்கியப் பேச்சுக்களை ஆற்றச் சந்தர்ப்பம் கிடைத்தது.அத்தோடு வானொலியில் பல கவியரங்குகளிலும் கலந்து கொண்டேன். பல கவியரங்குகளுக்குத் தலைமை வகிக்கும் வாய்ப்பும் கிட்டியது.
1998 ன் பிற்பகுதியில் கவிதைக் கலசம் என்ற பதினைந்து நிமிட நிகழ்ச்சியை  நடாத்தும் பொறுப்பு எனக்குக் கிட்டியது.அந்நிகழ்ச்சியில் அதுவரை, நேயர்கள் அனுப்புகின்ற கவிதையும், தாங்கள் படித்த சுவையான சில கவிதைகளையும் தான் ஒலிபரப்பி வந்தார்கள்.  சில்லையூர் செல்வராஜன், இளையதம்பி தயானந்தா, கவிஞர் நீலாபாலன் ஆகியோர் இவ்விதமாகச் செய்து வந்தனர்.நான் அப் பொறுப்பை ஏற்ற போது பதினைந்து நிமிட நேரத்தில் முதல் ஐந்து நிமிடங்களுக்கு கவிதை பற்றிய உரையை நயமாக ஆற்றி, அதன் பின்பே கவிதைகளை வாசித்தேன். என்னோடு கவிதை வாசிக்க மாவை வரோதயனும் அடிக்கடி வருவார்.இந்நிகழ்ச்சி திரு. மதியழகன் பணிப்பாளராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. திருமதி ஜமுனா சர்வானந்தா அவர்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தார். எனது வித்தியாசமான அந்த முயற்சிக்கு அவர்கள் ஆதரவளித்தனர். முப்பத்தி எட்டு வாரங்கள் வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 ற்கு கவிதைக் கலசம் நிகழ்ச்சி ஒலிபரப்பப் பட்டது.
பின்பு 2001-2002 காலப் பகுதியில் மீண்டும் கவிதைக் கலசம் நடாத்தும் பொறுப்பு எனக்குக் கிட்டியது. அப்போது அது அரை மணி நேர நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் 10-15 நிமிடங்கள் வரை எனது இலக்கியம், சமூகம், கவிதை சம்பந்தப் பட்ட உரை நிகழும். அதைத் தொடர்ந்தே கவிதைகள் வாசிக்கப் பட்டன. ஓராண்டுக்கு மேல் கவிதைக் கலசம் நிகழ்ச்சியை நடாத்தினேன்.அப்போது திருமதி.அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பணிப்பாளராகவும், திரு.உருத்திராபதி அவர்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்தார்கள்

No comments:

Post a Comment