Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-பரிசு-கௌரவம்


1991 ல் சர்வதேச ஆசிரியர் தினம் முதன் முதல் உலகளாவிய ரீதியில் கொண்டாடத் தொடங்கப்பட்ட போது, இலங்கையில் ஆசிரியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடாத்தப்  பட்டன.      
அதில் நாடகப் பிரதியாக்கப் போட்டியில் எனது “உருகி எரியும் கர்ப்பூரங்கள்” என்ற நாடகம் முதலாம் இடம் பெற்று ஜனாதிபதிப் பரிசைப் பெற்றது. இந்நாடகத்தை பின்பு வானொலி நாடகமாக மாற்றி எழுதினேன். அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தால் ஒலிபரப்பப் பட்டது. “அன்றில் பறவைகள்”  என்ற நாடக நூலில் இடம்பெற்ற இந் நாடகம் ஆங்கிலத்தில் “MELTING CAMPHORS” என்ற பெயரில் திரு.சு.பூபாலசிங்கம் அவர்களால் மொழி பெயர்க்கப் பட்டு, வவுனியாவில் மேடையேற்றப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.
1991 ல் வடக்குக் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் கௌரவிக்கப் பட்ட ஐந்து எழுத்தாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் . என்னை அந் நிகழ்வு உற்சாகப் படுத்தியது.                                   1993 ல் இந்து கலாசார அமைச்சு “தமிழ் மணி” பட்டம் தந்து கௌரவித்தது.அதுவும் எனக்கு உரமாகியது 2000 ல் வடக்குக் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் எனது முப்பது வருட கலை, இலக்கியப் பணியைப் பாராட்டி ஆளுநர் விருது தந்தார்கள்.அதுவும் என் இலக்கியப் பணிக்கு உந்துதலாக அமைந்துள்ளது.
  2003 ல் எகேட் நிறுவனத்தின் மூலம் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மட்டக்களப்பு காத்தான்குடியில் விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது .
வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுக்காக, இலக்கியப் பங்களிப்புச் செய்த இரண்டு பேரைக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா அது.
அந்த விழாவில் நானும் டாக்டர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் கௌரவிக்கப் பட்டோம். அந் நிகழ்வு ஓ.கே. குணநாதனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இத்தகைய கௌரவம் எனக்குக் கிடைப்பதற்கு முக்கிய காரணம் நான், டாக்டர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் இரண்டு காப்பியங்களை ஆய்வு செய்தது.
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் “புனித பூமியிலே” “மஹ்ஜபின் காவியம்” ஆகிய இரு காவியங்களையும் ஆராய்ந்து, நான் எழுதிய நூலை கவிஞர் ஜின்னாஹ் அவர்கள் நூலாக்கினார் .
அந் நூல் “கவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு” என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டில் தமிழக ஆளுநர் பாத்திமா பீபியினால் வெளியிடப் பட்டது.

No comments:

Post a Comment