Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-நாவல் முயற்சி


இதே காலத்தில் திரு.செங்கையாழியான் அவர்களிடம் அடிக்கடி சென்று உரையாடுவேன். நான் எழுதிய “அலைக்குமிழ்”  என்ற நாவலை அவரிடம் கொடுத்து, அவர் சொன்ன திருத்தங்களோடு வீரகேசரி நிறுவனத்திற்கு நூலாக்குவதற்காக அனுப்பியிருந்தேன்.
பிரதேச மணம் போதாதென்று அவர்கள் நிராகரித்திருந்தார்கள். அதோடு வீரகேசரி, நூலாக்க முயற்சியைக் கை விட்டதனால் எனது நாவலும் வெளி வராமலே போயிற்று.
அந்த நாவல் பின்பு வரதர் வெளியீடாக வர இருந்தது. இருப்பினும் வரதரும் நூல் வெளியீட்டைக் கை விட்டதால் இது வரை வெளிவரவில்லை. அலைக் குமிழ் அலைக் குமிழாகவே ஆகிவிட்டது.
“அகளங்கன்” என்ற புனை பெயரை அப்போது தேர்ந்தெடுத்தேன். களங்கம் இல்லாதவன் அகளங்கன்.
இதற்கு முன் “வன்னி வளவன்” என்ற பெயரில் கவிதை எழுதியிருக்கிறேன். சுவடுகள் என்ற சிறிய புதுக் கவிதைத் தொகுப்பு ஒன்று வவுனியாவில் சரவணையூர் சுகந்தன் என்பவரால் வெளியிடப் பட்டது. அதில் இப்பெயரிலேயே எனது “எடுப்பதோ பிச்சை” என்ற புதுக்கவிதை வெளிவந்தது. மதன் என்பதும் எனது ஒரு புனை பெயராக இருந்தது.
பின் “மலர்ந்தும் மலராத” என்ற ஒரு நாவலை எழுதினேன். அந்த நாவலும் இதுவரை வெளிவராமலே உள்ளது.
நாவல் எழுதும் முயற்சியை முற்றாகக் கை விட்டு விட்டு பழந்தமிழ் இலக்கியத் துறையில் கவனம் செலுத்தினேன். இதற்குத் தூண்டு கோலாக இருந்தவர் என் பெரு மதிப்புக்குரிய சிரித்திரன் ஆசிரியர் அமரர் சி.சிவஞானசுந்தரம் அவர்களே.                                                                                                             

No comments:

Post a Comment