தொடர்ந்து ஈழநாடு
பத்திரிகையில் சிறுகதை, கட்டுரைகள் முதலானவற்றை எழுதி வந்தேன். சிரித்திரன், சுடர்
முதலான சஞ்சிகைகளிலும், சோதிட மலரில் சோதிடக் கட்டுரைகளும் எழுதினேன்.
பின் 1979ல் வவுனியாவில் “வவுனியா இலக்கிய வட்டம்” என்ற
அமைப்பை உருவாக்கினோம். அதற்கு நான் தலைவராகவும், சர்வதேச பத்திரிகையாளராகவும்,
லண்டன் தமிழோசையின் மூத்த நிருபராகவும் விளங்கும் திரு.பி.மாணிக்கவாசகம் இணைச்
செயலாளர்களில் ஒருவராகவும், இப்பொழுது தமிழ்க் கவி என்று பிரபலமாக விளங்கும்
விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தமயந்தி உப தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்
தக்கது.
வவுனியாவில் அமைப்பு
ரீதியாக ஒரு இலக்கிய வட்டத்தை ஆரம்பித்து பல நிகழ்வுகளை நடாத்தினோம்.
1982ல் பண்டார வன்னியன் விழாவை முத்தமிழ் விழாவாக, வவுனியா
மாவட்ட சபை மூன்று நாட்கள் சிறப்பாக நடாத்தியது. .
அந்த விழாவிற்கான “பண்டார
வன்னியன் விழா மலர்” தயாரிப்பு, மலர்க் குழுவில் ஒருவனாக இருந்த என்னிடம்
விடப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் “பாயும் புலி பண்டாரக வன்னியன்” நாவலிற்கு எமது
மலரும் பல தகவல்களைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
1982 ல் எனது “சேரர் வழியில் வீரர் காவியம்” என்ற
குறுங்காவியம் வெளியிடப்பட்டது. சிலப்பதிகாரத்தில்
வரும் வஞ்சிக் காண்டத்தை விருத்தப் பாக்களினால் பாடி குறுங் காவியமாக வெளியிட்டேன்.
ஈழத்துச் சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பை காவலூர் ஜெகநாதன் வெளியிட்ட போது
அதில் எனது சிறுகதையும் இடம் பிடித்தது.
1984 ல் இருந்து எழுத்துத் துறையில் அதிக தீவிரம்
காட்டத் தொடங்கினேன் . ஈழமுரசு பத்திரிகை நடாத்திய சிறுகதைப்
பொன்விழா சிறுகதைப் போட்டியில் எனது “மீண்டும் ஒரு குருசேத்திரம்” சிறுகதை
இரண்டாம் பரிசு பெற்றது.
ஈழமுரசில் பல இலக்கியக்
கட்டுரைகளை, சமகாலப் பிரச்சனைகளோடு கலந்தும், ஒப்பிட்டும், நினைவு கூரத்தக்க
வகையிலும் எழுதினேன். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன.
அந்த உந்துதலால் திம்புப்
பேச்சு வார்த்தைக் காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்களும், இலங்கை அரசும் யுத்த
நிறுத்தம் செய்திருந்த போதும் ஆங்காங்கே யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களும், யுத்த
முறை அத்து மீறல்களும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் “மகாபாரதப் போரில் யுத்த
முறை அத்து மீறல்களும், யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களும்” என்ற தொடர் கட்டுரையை
எழுதினேன்.
அது ஈழ முரசு வார மலரில்
ஏழு கிழமைகள் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அது ஓ.கே.குணநாதன் அவர்களது
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் “பாரதப் போரில் மீறல்கள்” என்ற பெயரில்
நூலாக்கப் பட்டது.
தொடர்ந்து பல கட்டுரைகளை ஈழ முரசிலும்,
முரசொலியிலும், எழுதினேன். வீரகேசரி, தினகரன் ஆகிய தேசியப் பத்திரிகைகளிலும்
இலக்கியக் கட்டுரைகளை எழுதி வந்தேன்.
No comments:
Post a Comment