மார்கழி விடுமுறையில் எங்கள் வயலில் களை பிடுங்கச் செல்வோம். எமக்கு பத்து
ஏக்கர் வரையில் நெற்காணி இருந்தது. பெரிய நிலச்சுவாந்தர்கள் யாரும் எம் ஊரில்
இல்லை. எமது குடும்பமும் சாதாரண விவசாயக் குடும்பம் தான்.
எமது வயலில் களை
பிடுங்கிக் கொண்டிருக்கும்போது எனது தந்தையார் ஒரு போட்டியை வைப்பார்.
போட்டி என்ன
தெரியுமா? “பாட்டுக்குப் பாட்டு” ஆச்சரியமாக இருக்கிறதா! நான் சொல்வது 1966 ற்கு முந்திய கதை. பாட்டுக்குப் பாட்டு என்றால்
சினிமாப் பாட்டுக்குப் பாட்டு அல்ல.
பழந்தமிழ் இலக்கியப்
பாட்டு ஒன்றை அப்பா பாடி முடிப்பார். அவர் பாடிய பாட்டின் இறுதிச் சொல்லை முதற்
சொல்லாகக் கொண்டு யாராவது பாடல் பாட வேண்டும்.
அந்தாதி முறை என்று
சொல்லலாம். யாராவது பாடுவோம். ஒருவரும் பாடாது விட்டால் அவரே ஒரு பாடல் பாடுவார்.
வயலில் களை பிடுங்கும்
போதே எமது அறியாமையாகிய களையையும் பிடுங்கிய அவரது கல்வித் திட்டத்திற்கு நிகராக
எந்தக் கல்வித் திட்டத்தையும் என்னால் சொல்ல முடியாது.
மாலையில் வீட்ட்க்கு
வந்தபின் நாங்கள் எல்லோரும் தீவிரமாக பழந்தமிழ்ப் பாடல்களை ஆயத்தப்படுத்துவோம்.
மறுநாள் பாட்டுக்குப்
பாட்டு இன்னும் கலகலப்பாகும். பாராட்டு அமோகமாகக் கிடைக்கும். அம்மாவும் இந்
நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
அக்கா, தங்கைக்கு இந்த
வாய்ப்பு இல்லை. அவர்கள் வயல் வேலைகளுக்கு வருவதில்லை.
இப்படித் தொடங்கியது எனக்குப்
பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியும் ஆர்வமும்.
பம்பைமடு என்ற பெயர்
எப்படி வந்தது என்பதற்கு என் தந்தையார் கூறிய காரணம் என்ன தெரியுமா? பம்பை மரங்கள்
குளத்தில் நின்றதால் தான் பம்பைமடு என்ற பெயர் வந்தது என்றார்.
ஆனால் பம்பை மரங்கள்
நாங்கள் அறிய எங்கள் குளத்தில் இல்லை. அப்படி ஒரு மரம் இருப்பதாகவே எங்களுக்குத்
தெரியாது.
இராமாயணத்தில் பம்பைப்
படலம் என்றொரு படலம் உண்டு. பம்பை நதி என்று ஒரு நதி பற்றி கம்பர்
பாடியிருக்கிறார். அந்த நதிக்கரையில் பம்பை மரங்கள் நின்றதால் தான் அந்த நதிக்கு
அந்தப் பெயர் வந்தது என்று ஆதார பூர்வமாக விளக்கி, பம்பைமடுக் குளத்திலும் அப்படி
மரம் நின்றிருக்கும் என்பார். (மடு – நீர் நிலை)
இதை எங்கள் மட்டத்தில்
மட்டுமல்ல படித்தவர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிற கிராமத்துக் கூட்டங்களிலும்
அழகாகச் சொல்லி விளக்குவார்.
இதை ஏன் விரிவாகச்
சொல்கிறேன் என்றால், கணித விஞ்ஞான மாணவனாகக் கல்வி கற்று, கணித ஆசிரியராகக் கடமை
புரியும் எனக்கு, பழந்தமிழ் இலக்கிய ஆர்வம் எப்படி வந்தது என்பதற்கு இது தேவை.
ஒரு குழந்தைக்குத் தந்தையே
சிறந்த குரு என்பது, என்வரையில் மிகப் பொருத்தமே.
No comments:
Post a Comment