Wednesday, September 5, 2012

வெள்ளித்தமிழ்ச் சங்கம்


                         வெள்ளித் தமிழ்ச் சங்கம்:-
இலங்கை மணித் திருநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலை நாட்டின் கண்ணே வனப்பு மிகு மாவட்டமாக விளங்குவது நுவரெலியா மாவட்டம்.
அம் மாவட்டத்தில் அமைந்துள்ள தலவாக்கலைப் பிரதேசத்தில் அமைந்து காணப்படும் அழகான ஊர் ஹோல்புரூக் ஆகும்.
தமிழ்மணி அகளங்கன் அவர்கள் ஆசிரியப்பணி புரிவதற்காக 1985ல் ஹோல்புறுக் தமிழ் மகாவித்தியாலயத்திற்கு சென்றிருந்த காலம்.
அவருடன் மனைவியும்(நானும்) பிள்ளைகளும் அங்கு வசித்து வந்த காலம். அக் காலப் பகுதியில் ஆசிரியப் பணியை மிக்க கண்ணியத்துடனும், சேவை மனப்பான்மையுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்றி வந்ததுடன், இலக்கியப் பணியினையும் செய்து வந்தார்.
அக் காலப்பகுதியில், நாடகம், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றுடன், வானொலிப் பேச்சுக்கள் பலவற்றைப் பேசியுள்ளார்.
தற்பொழுது பிரபல எழுத்தாளராக, கல்விமானாக விளங்கும் திரு.சு.முரளிதரன் அவர்களும் அப் பாடசாலையில் சிலகாலம் ஆசிரியராகப் பணி புரிந்தார். இருவரும் இணைந்து பல இலக்கிய, சமூகப் பணிகளை மேற்கொண்டனர்.
முதற் தடவை ஆசிரியப் பணியை அங்கு மேற்கொண்டு பின்பு சிறிது காலத்தின் பின் சொந்த இடத்திற்கு வந்து, மீண்டும் அதே பாடசாலைக்கு சென்ற காலப்பகுதி.
இக் காலப் பகுதியில் எமது இரு குழந்தைகளுடன், எமது பெறா மகன் (நா.சேனாதிராஜா அவர்களின் மகன்) காண்டீபனும் எம்முடன் தனது படிப்பைத் தொடர்வதற்காக வந்திருந்தார்.
திருமணம்24.04.1981ல் நடைபெற்றது. மூத்தவர்மகன். பெயர் அநபாயன். 15.01.1983ல் பிறந்தார். மகள் அடுத்தவர். பெயர் அநிந்திதை.25.06.1984ல்பிறந்தார். இரண்டரை வயதிலேயே ஏடு தொடக்கி விட்டோம்.             
இரண்டு வயதிலேயே பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள், தேவாரம், மழலைப் பாடல்கள் ,கதைகள் என பலவற்றையும் சொல்லிக் கொடுப்போம். அவர்களும் பாடமாக்கி மழலை மொழியில் சொல்லி எம்மை மகிழ வைப்பார்கள்.
நாம் எமது பெற்றோரிடமிருந்து அன்பு, பண்பு, ஒழுக்கம், பொறுமை, பக்தி போன்ற பண்பாட்டு விழுமியங்களைப் பெற்றுக் கொண்டது போல எம் குழந்தைகளும் எம்மிடமிருந்து அந்த அழியாச் சொத்தைப் பெறவேண்டும் எனும் பெருவிருப்பு எமக்கிருந்தது.
நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்த காலத்தில், சிரித்திரன் சஞ்சிகையில் பல ஆக்கங்களை இவர் எழுதிக்கொண்டிருந்தார். சிரித்திரன் ஐயா வீட்டிற்கு குடும்பமாகச் செல்வோம். சிரித்திரன் ஐயாவும், அம்மாவும் எங்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவார்கள்.அம்மா தனது அனுபவங்கள் பற்றிக் கூறுவார்.அவர் சிரித்திரன் சஞ்சிகை வெளியாவதற்கு ஐயாவுடன் இணைந்து தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவார்.
என்னிடம் ஒரு தடவை, “பிள்ள நான் எனது பிள்ளைகளுக்கு சமைக்கும் அரிசியையும் கொட்டி விளையாடச் செய்து விட்டு ஐயாவுக்கு சஞ்சிகை வெளியிட ஒத்தாசையாக இருப்பேன்” என்று கூறினார். அவர் ஒரு உத்தமமானவர்.
எமது குழந்தைகள் எந்தக் காரணம் கொண்டும் அப்பாவின் எழுத்துத் தொடர்பான எந்தப் பொருட்களையும் தொடமாட்டார்கள். “அப்பா முக்கியமான வேலை செய்கிறார். அவரைக் குழப்பக் கூடாது. மேசையில் உள்ள எதையும் எடுக்கக் கூடாது” என்று அவர்களே சொல்லிக் கொள்வார்கள்.
மகன் தனது மழலைக் குரலில் “திகட சக்கரச் செம்முகம்  ஐந்துளான்” எனும் கந்த புராண காப்புப் பாடலை பாடிக் காட்டுவான்.அத்துடன் “ வாரணம்  பொருத மார்பும்”எனும்  இராமாயணப் பாடலைப் பாடிக் காட்டி அதற்குரிய கதையையும் சொல்லிக் காட்டுவான்.
ஒரு சரஸ்வதி பூஜைக் காலத்தில், அப்பா ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் படிப்பித்த போது மகளையும் கூட்டிச் சென்றார். மகளுக்கு அப்போது இரண்டரை வயதிருக்கும் .சகல கலா வல்லி மாலைப் பாடல்கள் முழுவதையும் வரிசைக் கிரமமாக பாடி முடித்தார்.
ஹோல் புறுக் பாடசாலை விடுதியில் தங்கியிருந்தோம். அக்காலப் பகுதியில் இவர் பல வானொலிப் பேச்சுக்களை ஆற்றியுள்ளார். கடுரைகள், சிறுகதைகள்,கவிதைகள், நாடகங்கள் போன்ற பல ஆக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். தீவிரமாக எழுதிய காலம் என்று கூறலாம்.
தங்கு தடையின்றி வெகு விரைவாக அழகான வசன நடையில் கூறிக் கொண்டே இருப்பார். அந்த வேகத்திற்கு பிழை விடாது கவனமாக எழுத வேண்டும். இயன்ற வரையில் சொல்லச் சொல்ல கவனமாக எழுதுவேன்.              
எம்முடன் எமது பெறா மகன் காண்டீபன் தனது படிப்பைத் தொடர்வதற்காக எம்முடன் தங்கி இருந்தார். அவர் பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்போம்.
தமிழ், சமயம் தொடர்பான அறிவை வளர்க்க வேண்டிய தேவை இருந்தது. இப்படியான ஒரு சூழலில் தோன்றியது தான் வெள்ளித் தமிழ்ச் சங்கம்.
எமது “வெள்ளித் தமிழ்ச் சங்கம்”  1989 ம் ஆண்டு ஜுன் மாதம் 2 ந் திகதி (ஹோல்புறுக் ஆசிரிய விடுதி) எமது வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. நா. தர்மராஜா தலைவராகவும், திருமதி பூரணேஸ்வரி தர்மராஜா செயலாளராகவும், செல்வன். சே.காண்டீபன், செல்வன்,த.அநபாயன், செல்வி.த.அநிந்திதை ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப் பட்டனர்.
எமது பிள்ளைகளுக்கு, அவர்கள் எழுத வாசிக்க தெரியாத பருவத்தில் இருந்தே கதைகள், பாடல்கள் போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டோம். வீட்டில் இருந்த கரும்பலகையில் பழந்தமிழ் இலக்கியப் பாடல்களை இவர் எழுதி விடுவார். முதலில் நான் பாடமாக்கி விட்டு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பேன். இலக்கியம், சமயம் சார்ந்த கதைகளும் சொல்லிக் கொடுப்போம்.
மழலைப் பாடல்கள் பலவற்றை இவர் எழுதி ஆசையுடனும் ஆர்வத்துடனும் சொல்லிக் கொடுப்பார். மகன் மனக் கணக்குகளை வெகு விரைவில் சொல்லிவிடுவான். மகள் நன்கு வாசிப்பதுடன் மனப்பாடமும் செய்து விடுவாள்.
ஒருமுறை மகளுக்கு நான் “பொன்னார் மேனியனே...”தேவாரம் சொல்லிக் கொடுத்தேன். .பாடமாக்கி  சொல்லி விட்டு “அம்மா ஆரை நினைக்கேனே என்று பாடும் போது அப்பாவைத்தான் நினைக்க வேணும் போல இருக்கு” என்று கூறினாள். ஆச்சரியமாக இருந்தது. வாசிக்கத் தெரியாத வயதில் ஏதோ பொருள் விளங்கியிருக்கிறது. அத்துடன் அப்பாவிடம் உள்ள பாசத்தையும் உணர முடிந்தது.
மகனுக்கு எழுத்து எழுதிப் பழக்கத் தொடங்கிய காலத்தில், ஒரு எழுத்து புத்தகத்தில் பிழையாக எழுதப் பட்டிருந்தது. அதைச் சரியாகச் சொல்லிக் கொடுத்தேன். ஒரு பதிலும் கூறாமல் இருந்து விட்டான். அப்பா பாடசாலையில் இருந்து வந்தபின் அந்த எழுத்துப் பற்றிக் கேட்டு, அம்மா சொல்லித்தந்தது சரிதான் என்று சொன்ன பின்தான் அதை ஒப்புக் கொண்டான்.
நாம் சிறுவர்களாக இருக்கும்போது கணித வாய்ப்பாட்டை ராகம் போட்டு ஈரொண்டு இரண்டு என்று பாடமாக்குவதுதானே வழக்கம்.யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்றிருந்த சமயம்,அந்த உறவினர் வீட்டில் மூன்றாம் வாய்ப்பாடு கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. மகன் அநபாயனுக்கு அப்போது வாய்ப்பாடு பாடமாக்கச் சொல்லிக் கொடுக்காத வயது.இருப்பினும் கரும்பலகைக்குப் பக்கத்தில் போய் பார்த்துக்கொண்டு நின்றான்.சரி வாய்ப்பாடு எழுதப்பட்டிருக்கு பாடமாக்கிப் பார் என்று கூறினோம்.சிறிது நேரம் மௌனமாக இருந்தான்.கஸ்ரம் என்றால் பாடமாக்க வேண்டாம் என்றோம்.உடனே அவன் “ஏன் பாடமாக்குவான்,மூன்றாம் வாய்பாடு மூன்று மூன்று ஆகக் கூடிக் கொண்டு போகுது.பேந்தேன் பாடமாக்குவான்”என்று கூறிய பதில் தூக்கி வாரிப் போட்டது.வாய்ப்பாட்டு முறையினைக் காரணத்துடன் கண்டு பிடித்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் உள்ளது.                                 
அப்பாவுடன் வெளியில் செல்லும்போது நடந்து கொண்டே சில கணக்குகளுக்கு மனத்தால் கணித்து பதில் சொல்லி விடுவான்.
ஒரு முறை அப்பாவுடன், எமது வீட்டில் இருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ள முரளியின் வீட்டுக்குச் சென்று திரும்பும் போது, அப்பாவிடம் கேட்டிருக்கிறான். ஒரு யாரில் எத்தனை அடி என. அப்பாவும் மூன்று அடி ஒரு யார் என்றார். பின் ஒரு மைல் எத்தனை யார் என்று கேட்டான்.1760 யார் என்றார் .பின் ஒன்றும் கதைக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தான். இடையில் ஏதும் கதை கேட்டால் “ம்” என்ற பதில்தான் வந்தது. எமது வீடு இரண்டு மைல் தொலைவில் உள்ளது என்பது அவனுக்குத் தெரியும். வீடு வந்து சேர்ந்தவுடன் அவன் சொன்னது எம்மை வியப்பில் ஆழ்த்ததியது.
எமது வீடு முரளி மாமா வீட்டில் இருந்து 10560 அடி தூரத்தில் தானே இருக்கிறது என்றான். அப்போது அவன் இரண்டாம்  ஆண்டில் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.
குடும்ப அந்நியோன்யம், ஒற்றுமை, பாசப் பிணைப்பு, புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு, ஆளுமைப் பண்பு, நெறி தவறாது ஒரு கட்டுக் கோப்புடன் வளரும் வாய்ப்பு போன்ற பல அம்சங்களுடன் வாழ்வை நெறிப் படுத்தும் அமைப்பாக எமது வெள்ளித் தமிழ்ச் சங்கம் விளங்க வேண்டும் என்பது எமது முக்கிய குறிக்கோள் ஆகும்.
எமது பிள்ளைகளுக்கு நாம் அடிக்கடி கூறும் அறிவுரை, “முதலில் நல்ல பிள்ளைகளாக இருங்கள் பின் வல்ல பிள்ளைகளாக வளருங்கள்”  என்பது தான்.
    வெள்ளிக் கிழமை கூட்டம் ஆரம்பித்து தொடர்ந்தும் வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் இடம்பெற வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தியதால் அதற்கு வெள்ளித் தமிழ்ச் சங்கம் எனும் பெயரை வைப்போம் என காண்டீபன் கேட்டுக் கொண்டதன் படி வெள்ளித் தமிழ்ச் சங்கம் என்று பெயர் இட்டோம்.
இவ் விதமான ஆரம்பத்துடன்தான் எமது வெள்ளித் தமிழ்ச் சங்கத்திற்கு நிகழ்ச்சிகளைத் தயார்ப் படுத்திக் கொண்டேன்.
எமது வீட்டில் உள்ள கரும்பலகையில் இவர் பழந்தமிழ் இலக்கியப் பாடல்களை எழுதி விடுவார். முதலில் நான் பாடமாக்கி விட்டு பிள்ளைகளுக்கச் சொல்லிக் கொடுப்பேன்.   
எமது வெள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்ட பதினாறு  நிகழ்வுகள்  ஹோல்புறுக் ஆசிரிய விடுதியில் நடந்தேறின. பின்பு தொழில் மாற்றம் காரணமாக 1991ல்  வவுனியா வந்து விட்டோம்.
நாட்டு நிலைமை, இடமாற்றம், பலவாறான சோதனைக் காலம் அது. பதினாறாவது கூட்ட நிகழ்வினைத் தொடர்ந்து இரண்டரை வருட நீண்ட இடை வேளையின் பின் பதினேழாவது கூட்டம் நடைபெறும் வாய்ப்புக் கிட்டியது.
வவுனியாவில் பல புதிய உறுப்பினர்களுடன் நான்கு கூட்டங்கள் தான் நடந்தேறின.1995 ம் ஆண்டு வரையில் தான் இந்நிகழ்வு இடம் பெற்றது. பின் தொடர முடியாமற் போய் விட்டது.
வவுனியாவிற்கு வந்து வாழத் தொடங்கிய காலப்பகுதியில் அதிக புத்தகங்களை வெளியிடும் வாய்ப்புக் கிட்டியது. புத்தகம் அச்சிடப்பட்டு, வெளியீடு செய்வதன் முன் அனைத்துப் புத்தகங்களையும் பரீட்சித்துப் பார்ப்பது வழக்கம்.புத்தகங்களின் பக்கங்கள் சரியாக உள்ளதா, எல்லாப் பக்கங்களும் உள்ளனவா, ஒழுங்காகக்  கட்டப் பட்டுள்ளனவா என்று பார்த்து நேர்த்தியாகத்தான் புத்தகங்களை வெளியீடு செய்வார். இந்த வேலைகளில் நானும்,பிள்ளைகளும் அப்பாவுடன் சேர்ந்து செய்வோம். அச்சுப் பிழை பார்ப்பதிலும் உதவி செய்வோம்.         
எமது நிகழ்வில் பாடப் படும் எமது குடும்ப கீதம் கீழே இடம் பெற்றுள்ளது. அத்துடன் எமது கூட்ட அறிக்கைகள் சிலவும் இடம் பெற்றுள்ளன. அவ் அறிக்கைகள் மூலம் பல நினைவலைகளை மீட்டிப் பார்த்து திருப்தி அடைவதில் மகிழ்வடைகிறேன்.                          

No comments:

Post a Comment